அரசு ஆதரவுடன் நடக்கும் அமீரக காளைச் சண்டை

அமீரகத்தில் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு காளைச் சண்டை நடந்து வருகிறது.

Update: 2018-02-23 22:45 GMT
மிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று ஏறு தழுவுதல். சங்க இலக்கிய காலங்களிலேயே இருந்து வந்த இந்த விளையாட்டு தான், தற்போது ஜல்லிக்கட்டு என்று பெயர் மாற்றம் கண்டிருக்கிறது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் காளைகளை வைத்து பல வகையான போட்டிகளை நடத்தி வருகிறார்கள். ஸ்பெயின் நாட்டில் கூட காளையின் முன்பாக ஒரு சிவப்புத் துணியைக் காட்டி நடத்தப்படும் கண்கட்டு வித்தைப் போட்டி நடக்கிறது. இந்தியாவிலேயே வட மாநிலங்களில் எருமைகளுக்கு இடையிலான போட்டிகள், கர்நாடக மாநிலத்தில் இரண்டு எருதுகளை ஏரில் பூட்டி, அதை பிடித்தபடியே ஒருவர் உடன் ஓடும் போட்டி போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில் அமீரகத்திலும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு காளைச் சண்டை நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் இரண்டு காளைகள் நேருக்கு நேராக மோதிக்கொள்ளும். உலக அளவில் காளைச் சண்டையானது இங்கிலாந்து நாட்டில் தான் அதிகமாக நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அங்குள்ள காளைகள் கடுமையான காயமடையும் அளவிற்கு சண்டை போடுகின்றன. ஆனால் அமீரகத்தில் நடைபெறும் காளைச் சண்டைகளில் ஆபத்து மிகவும் குறைவாக இருக்கிறது.

அமீரகத்தில் உள்ள புஜேராவில் கடற்கரைப் பகுதிகளுக்கு அருகில் சென்றாலே, அங்கு நடைபெறும் பாரம்பரிய முறையிலான விழாக்கள் பலவும் நம்மை ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும். அவற்றுள் ஒன்றுதான், அமீரக மக்களால் வாரம் தோறும் விறுவிறுப்பாக நடத்தப்படும் காளைச் சண்டை. இந்த காளைச் சண்டைப் போட்டியானது, கடந்த 60 ஆண்டுகளாக புஜேரா பகுதியில் நடத்தப்பட்டு வருகிறது. ரம்ஜான் மாதத்தை தவிர்த்து, மற்ற அனைத்து மாதங்களிலும் வாரம் தோறும் வெள்ளிக் கிழமைகளில் இந்தக் காளைச் சண்டை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்காக அங்குள்ள கிராம மக்கள் பல்வேறு உயர் ரக காளை மாடுகளை வளர்த்து வருகின்றனர். புஜேராவின் கிழக்குப் பகுதியில் இந்த காளைச் சண்டைகளை நடத்த, புஜேரா அரசு சார்பில் இடம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த இடமானது 6 கூடைப்பந்து விளையாட்டு போட்டிகளை நடத்தும் அளவுக்கு விஸ்தாரமான மைதானமாக உள்ளது.

இந்த காளைச் சண்டைகளுக்காக உலகில் உள்ள பல்வேறு வகையான காளை மாடுகள் இங்கு வளர்க்கப்படுகின்றன. இந்திய நாட்டு காளைகள் கூட இங்கு வளர்க்கப்படுவது ஆச்சரியம் அளிப்பதாக இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் காளைச் சண்டை மைதானத்தில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் முன்னிலையில் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மைதானத்தைச் சுற்றிலும், கம்பி களால் ஆன வேலி போடப்பட்டிருக்கும். ஒருசில நேரங்களில் காளைகள் கம்பி வேலியை தாண்டிக் குதித்து விடக் கூட வாய்ப்பு இருப்ப தால், கம்பி வேலியில் இருந்தும் குறிப்பிட்ட தூரத்தில் இருந்தே இந்தப் போட்டியை கண்டுகளிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்படு கிறார்கள்.

இந்தப் போட்டிகளில் வெற்றி பெரும் காளை மாடுகளை தேர்வு செய்ய நடுவர் குழு ஒன்றும் உள்ளது. மைதானத்தின் நடுவே ஒரு நடுவர் குச்சியை வைத்துக் கொண்டு இருப்பார்.

போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு சத்தான தீவனங்கள் மற்றும் திரவ உணவு அளிக்கப்பட்டு, போட்டிக்கு தயார் செய்யப்படு கிறது. போட்டிகளில் நேருக்கு நேர் மோதும் காளைகள் இரண்டும், ஒரே இனத்தைச் சேர்ந்தவையாக இருக்க வேண்டும் என்பது போட்டியின் விதிகளில் ஒன்று.

போட்டி மிகவும் எளிமையானது. ஒரு சுற்றில் இரண்டு மாடுகள் மோதும். காளை மாடுகளின் பலத்தை நிரூபிக்கும் வகையில் அவை இரண்டும் நேருக்கு நேராக மோதவிடப்படும். ஒவ்வொரு மாடுகளின் பாதுகாப்பிற்காகவும் இரண்டு பக்கம் கட்டப்பட்ட கயிறுகளை, பக்கத்திற்கு 10 பேர் என்ற கணக்கில் பிடித்திருப்பார்கள். ஒரு காளையை, மற்றொரு காளை பின்னுக்குத் தள்ள வேண்டும் என்பது போட்டியின் விதி. அப்படி ஒரு காளை மற்றொரு காளையை பின்னுக்குத் தள்ளி விட்டால், வெற்றிபெற்ற காளையுடன் அடுத்த காளை களம் காணும். தோற்ற காளை போட்டியில் இருந்து நீக்கப்படும். இப்படி ஒவ்வொரு காளையாக வெற்றிபெற்று இறுதிவரை களத்தில் நிற்கும் காளை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும்.

களத்தில் இறக்கி விடப்படும் காளை மாடுகள், சீறிப்பாய்ந்து தனக்கு முன்பாக உள்ள காளைகளை பலத்துடன் கொம்புகளால் மோதுகின்றன. சில நேரங்களில் ஆக்ரோஷமான சண்டைகளுக்கு நடுவில் காளைகள் மக்கள் பக்கம் திரும்பி விடவும் வாய்ப்பு அதிகம். இன்னும் சில சமயங்களில் ஒரு காளையால், மற்றொரு காளைக்கு சிறிய காயங்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெறும் காளை மாடுகளுக்கு, பரிசுகளோ அல்லது பணமோ வழங்கப்படுவது இல்லை. மாறாக அந்தக் காளையை வைத்திருப்பவர்களுக்கு சில உரிமைகளும், கவுரவமும் வழங்கப்படுகிறது. மேலும் பலம் வாய்ந்த காளை மாடுகள் சந்தையில் 2 லட்சத்து 50 ஆயிரம் திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.44 லட்சம்) மதிப்பிற்கு விலை போகின்றன. இதற்காகவே போட்டி நடக்கும் இடத்திற்கு மாட்டு வியாபாரிகள் குவிகின்றனர். பலம் வாய்ந்த மாடுகளை வைத்திருப்பதை ஒரு கவுரவமாக கருதுவதால், அதற்கு கடும் கிராக்கி உள்ளது.

பரிசு தொகை கொடுத்தால் அது குறைந்த அளவிலேயே இருக்கும். ஆனால் பலம் வாய்ந்த காளைகளுக்கு சந்தையில் கிடைக்கும் தொகை அதிகமாக இருப்பதாலும், மாடு வளர்ப்பவர்களும் பரிசுகளை எதிர்பார்ப்பதில்லை.

புஜேராவில் நடக்கும் இந்த காளைச் சண்டையை காண அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் படையெடுத்து வருகின்றனர். பாரம்பரியத்தை வளர்ப்பதில் அமீரகம் காட்டும் அக்கறையை இதுபோன்ற காளைச் சண்டைகள் பறைசாற்றுகின்றன. 

மர்யம். சா

மேலும் செய்திகள்