ரெட்டிவலம் கிராமத்தில் மேற்கூரை உடைந்துவிழும் ஆபத்தான நிலையில் பள்ளிக்கட்டிடம்

பள்ளி கட்டிட மேற்கூரை இடிந்து விழுவதற்கு முன்பு சீரமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Update: 2018-02-22 23:49 GMT
பனப்பாக்கம்,

பனப்பாக்கத்தை அடுத்த ரெட்டிவலம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வகுப்பறை கட்டிடம் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெமிலி ஒன்றியத்தை சேர்ந்தது ரெட்டிவலம் கிராமம். இங்கு அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நாகராஜி என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்துவருகிறார். ஒரு அறையில் 1-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரை 38 மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். மற்றொரு அறையில் 5-ம் வகுப்பு இயங்கி வருகிறது. இந்த வகுப்பில் 16 பேர் படிக்கிறார்கள். 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகள் தனித்தனி அறைகளில் இயங்கிவருகின்றன.

இதில் 1-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரை 38 மாணவ- மாணவிகள் படிக்கும் வகுப்பறை கட்டிடம் மிகவும் பழுதடைந்து இடிந்துவிழும் ஆபத்தான நிலையில் உள்ளது. கட்டிடத்தின் மேற்கூரை ஓடுகள் ஆங்காங்கே உடைந்து விழுந்துள்ளது. லேசான காற்று வீசினால்கூட ஓடுகள் உடைந்து விழும் அபாயம் உள்ளது.

இதனால் மழைபெய்தால் பள்ளி வகுப்பறையில் மழைநீர் ஒழுகும் நிலை உள்ளது. மேற்கூரை ஓடுகள் ஆங்காங்கே உடைந்து உள்ளதால் பகலில் வகுப்பறையில் பாடம் படித்துக்கொண்டிருக்கும் மாணவ- மாணவிகள் மீது வெயில் படுகிறது.

இதனால் கடந்தசில மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் சேர்ந்து பெரிய தார்ப்பாய் வாங்கிவந்து வகுப்பறைக்குள் சூரிய ஒளி படாமல் இருக்கவும், மழைபெய்தால் உள்ளே மழைநீர் வராமல் இருக்கவும் தற்காலிகமாக மேற்கூரையின்மீது தார்ப்பாயை விரித்து வைத்துள்ளனர். தார்ப்பாய் காற்றில் பறக்காமல் இருக்க அதன்மீது ஆங்காங்கே ஓடுகள் வைக்கப்பட்டுள்ளது.

கடந்தசில நாட்களுக்கு முன்பு இந்த வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது மேற்கூரையில் இருந்து ஓடு உடைந்து விழுந்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேற்கூரை ஓடுகள் அடிக்கடி திடீர் திடீர் என்று உடைந்து விழுகிறது. மேலும் பல ஓடுகள் உடைந்து விழும் நிலையில் உள்ளதால் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை தினமும் அச்சத்துடனேயே பள்ளிக்கு அனுப்பி வருகிறார்கள்.

1-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்புவரை மாணவ- மாணவிகள் படிக்கும் இந்த வகுப்பறையை சீரமைக்கக்கோரி இப்பகுதி பொதுமக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதிகாரிகளும் பள்ளியின் நிலைமையை நேரில் பார்த்தும் இதுவரை பள்ளியை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மிகவும் ஆபத்தானநிலையில் இருக்கும் இந்த பள்ளி கட்டிட மேற்கூரை இடிந்து விழுவதற்கு முன்பு சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்