வனத்துறை அதிகாரியின் காரை தூக்கி வீசிய காட்டு யானை

பந்திப்பூர் வனப்பகுதியில் தங்கும் விடுதியின் முன்பு நின்ற வனத்துறை அதிகாரியின் காரை காட்டு யானை தூக்கி வீசி சேதப்படுத்தியது.

Update: 2018-02-22 23:32 GMT
கொள்ளேகால்,

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவில் பந்திப்பூர் தேசிய வன சரணாலயம் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதிக்கு பல்வேறு இடங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால், பந்திப்பூர் வனப்பகுதியில் வனத்துறை சார்பிலும், தனியார் சார்பிலும் தங்கும் விடுதிகளும், ரெசார்டுகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பந்திப்பூர் தேசிய வன சரணாலய இயக்குனர் அம்பாடி மாதவ், தனது குடும்பத்தினருடன் வனத்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதிக்கு வந்து தங்கியிருந்தார். அவர் தனக்கு சொந்தமான காரில் அங்கு வந்திருந்தார். தனது காரை, விடுதிக்கு வெளியே நிறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், நள்ளிரவு 1 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று, அம்பாடி மாதவின் காரை தனது தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதில் கார் சேதமடைந்தது. இதனை பார்த்த, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வனத்துறையினர், பட்டாசுகளை வெடித்தும், தீப்பந்தங்களை காண்பித்தும் அந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். மறுநாள் காலையில் அம்பாடி மாதவ் வெளியே எழுந்து வந்து பார்த்தார்.

அப்போது அவருடைய கார் சேதமடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக வனத்துறையினர், அவரிடம் நடந்தை கூறினார்கள். வனத்துறையினருக்கு சொந்தமான தங்கும் விடுதிக்கு காட்டு யானை வந்து சென்ற தகவல் அங்கு பரவியது. இதனால் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், வனப்பகுதிக்குள் தங்கும் சுற்றுலா பயணிகளுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பந்திப்பூர் தேசிய வன சரணாலய இயக்குனர் அம்பாடி மாதவ் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பந்திப்பூர் வனப்பகுதியில் உள்ள வனத்துறையினரின் தங்கும் விடுதிக்கு காட்டு யானை வந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பீதியடைய வேண்டாம். இனி, அங்கு காட்டு யானைகள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த யானை உணவு தேடி தான் இங்கு வந்துள்ளது. பந்திப்பூர் வனப்பகுதியில் 13 ரேஞ்சில் உள்ள ஏரிகளை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.

கோடைகாலத்தில் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க, பந்திப்பூர் வனப்பகுதியில் 425 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் என்.பேகூர், மூலகொலே, பந்திப்பூர் ஆகிய 3 இடங்களில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்