கட்டுமான அதிபர் உள்பட 2 பேருக்கு தலா 3 ஆண்டு ஜெயில்

கட்டிடம் இடிந்து 18 பேர் பலியான வழக்கில் கட்டுமான அதிபர் உள்பட 2 பேருக்கு தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தானே கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2018-02-22 22:19 GMT

தானே,

தானே வாக்ளே எஸ்டேட் பகுதியில் உள்ள சாக்கடையையொட்டி 5 மாடி கட்டிடம் கட்டப்பட்டு இருந்தது. இந்த கட்டிடம் கடந்த 1998–ம் ஆண்டு நவம்பர் 7–ந்தேதி திடீரென இடிந்து தரைமட்டமானது. இந்த பயங்கர கட்டிட விபத்தில் 18 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியானார்கள்.

இது தொடர்பாக போலீசார் அந்த கட்டிடத்தை கட்டிய கட்டுமான அதிபர் சரத்பாய் மான்சிங் பவார், கட்டிட வடிவமைப்பாளர் ஆனந்த் ஆஸ்தபுத்ரே உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது தானே மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த நேரத்தில் ராமசாமி ராமன்னா என்பவர் இறந்து விட்டார். மற்ற 8 பேர் மீதான விசாரணை நடந்து வந்தது. விசாரணை நிறைவில் கட்டுமான அதிபர் சரத்பாய் மான்சிங் பவார், கட்டிட வடிவமைப்பாளர் ஆனந்த் ஆஸ்தபுத்ரே ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. மற்ற 6 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டவில்லை.

இந்தநிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, குற்றவாளிகள் சரத்பாய் மான்சிங் பவார், ஆனந்த் ஆஸ்தபுத்ரே ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். மற்ற 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்