குப்பைகளை தரம்பிரித்து வழங்கும் பொதுமக்களுக்கு தங்கக்காசு

குப்பைகளை தரம்பிரித்து வழங்கும் பொதுமக்கள் மற்றும் தரம்பிரித்து வாங்கும் துப்புரவு பணியாளர்களுக்கு தங்கக்காசு பரிசாக அளிக்கப்படும் என்று கலெக்டர் லதா தெரிவித்தார்.

Update: 2018-02-22 22:15 GMT
மானாமதுரை,

மானாமதுரையில் சுகாதார பணிகள் குறித்து நேற்று கலெக்டர் லதா திடீர் ஆய்வு மேற்கொண்டார். மானாமதுரை புதிய பஸ் நிலையம், வாரச்சந்தை, மாங்குளம் குப்பை கிடங்கு உள்ளிட்ட இடங்களில் அவர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

மானாமதுரை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வருகிற 1-ந்தேதி முதல் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம்பிரித்து பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து வாங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வர்த்தக கடை முன்பு குப்பைகள் கொட்டினால் கடும் நடுவடிக்கை எடுக்கவும், கடையின் உரிமையாளர்கள் குப்பைகளை தரம்பிரித்து கொடுக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கவும் அல்லது கடையின் உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும் வருகிற 1-ந்தேதி முதல் குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் பொதுமக்களுக்கும், தரம்பிரித்து வாங்கும் துப்புரவு பணியாளர்களுக்கும் தங்கக்காசு பரிசாக அளிக்கப்பட உள்ளது.

மானாமதுரை பேரூராட்சி பகுதியில் தினசரி 8 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதில் 5 டன் மக்கும் குப்பைகளில் இருந்து உரங்கள் தயாரிக்கப்பட்டு, அவை கிலோ ரூ.2 அல்லது ரூ.3 என விற்பனை செய்யப்படுகிறது. நகரில் தினசரி குப்பைகள் தேங்காத வகையில் அவற்றை முழுமையாக அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பைக்கிடங்கில் குப்பைகளை தரம் பிரித்து வைக்க வேண்டும். வர்த்தக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். துணிப்பைகளை பயன்படுத்த வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து கலெக்டர் லதா, மானாமதுரை நகரில் உள்ள கட்டண கழிப்பறைகள், சுகாதார வளாகங்களை ஆய்வுசெய்தார். அப்போது, நகரில் சுகாதார பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ராஜா, செயற்பொறியாளர் குமரகுரு, செயல் அலுவலர் ஜான் முகமது, சுகாதார ஆய்வாளர் அபுபக்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்