குடும்பத்துடன் விவசாயி தீக்குளிக்க முயற்சி

விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் விவசாயி தீக்குளிக்க முயன்றார்.

Update: 2018-02-21 22:55 GMT
விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே மன்னம்பாடியை சேர்ந்தவர் கணபதி (வயது 40). விவசாயி. இவருடைய மனைவி செந்தமிழ்செல்வி. இவர்களுக்கு கவுசல்யா (10) என்ற மகளும், லோகேஷ் (8) என்ற மகனும் உள்ளனர்.

கணபதி தனக்கு சொந்தமான இடத்தில் குடிசை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய இடத்தை அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண், அவரது பெயருக்கு பட்டா மாற்றம் செய்தார். இதையடுத்து, அந்த பெண் கணபதி வீடு கட்டி வசித்து வந்த இடத்திற்கு உரிமை கோரினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கணபதி இது பற்றி மாவட்ட கலெக்டர், கோட்டாட்சியர், தாசில்தார் ஆகியோரை சந்தித்து முறையிட்டு மனு அளித்தார். ஆனால் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திராவை நேரில் சந்தித்து கணபதி மனு அளித்தார். அந்த மனுவை பெற்ற அவர், உரிய நடவடிக்கை எடுக்க வேப்பூர் தாசில்தாருக்கு உத்தரவிடுவதாக தெரிவித்தார். இருப்பினும், இதுவரை இப்பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் கணபதி வேப்பூர் தாலுகா அலுவலத்திற்கு சென்று தனது புகார் குறித்து கேட்டார். அங்கு அவருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த கணபதி தனது மனைவி, குழந்தைகளுடன் மண்எண்ணெய் கேனை எடுத்துக் கொண்டு நேற்று விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அலுவலகம் முன்பு கணபதி தனது குடும்பத்துடன் உடலில் மண்எண்ணெயை ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அவர்களிடமிருந்து மண்எண்ணெய் கேனை பிடுங்கி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.

இதற்கிடையே இது பற்றி தகவல் அறிந்த கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திரா, கணபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து கணபதி குடும்பத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்