உலக முதலீட்டாளர் மாநாடு தேர்தலை குறிவைத்து நடக்கும் நிகழ்ச்சி

உலக முதலீட்டாளர் மாநாடு தேர்தலை குறிவைத்து நடக்கும் நிகழ்ச்சி என்று மராட்டிய காங்கிரஸ் கட்சி தலைவர் அசோக் சவான் தெரிவித்துள்ளார்.

Update: 2018-02-21 22:48 GMT

மும்பை,

மராட்டிய அரசு சார்பில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாடு மும்பையில் நடந்து வருகிறது. இந்த நிலையில் மும்பையில் நேற்று மராட்டிய மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் அசோக் சவான் நேற்று கூறியதாவது:–

முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து அடுத்த வாரம் தொடங்க இருக்கும் சட்டசபை கூட்டத்தொடரில் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.

2 ஆண்டுகளுக்கு முன்னர் ‘மேக் இன் இந்தியா’ மாநாட்டில் ரூ. 8 லட்சம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆனதாகவும், அதன்மூலம் 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறப்பட்டது. பின்னர் என்ன நடந்தது? அதே பாதையில் தற்போது முதலீட்டாளர் மாநாடு சென்றுகொண்டிருக்கிறதா? 2019– ஆண்டிற்கான தேர்தலை மனதில் கொண்டே முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

3½ ஆண்டு தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் மக்கள் விரக்தி அடைந்து விட்டனர். அனைத்து துறைகளிலும் அரசு திட்டங்கள் தோற்றுவிட்டது.

வேலைவாய்ப்பு இல்லாததாலும், பயிர்க்கடன் முறையாக வழங்கப்படாததாலும் விவசாயிகளும், இளைஞர்களும் மந்திராலயா சென்று தற்கொலை செய்கின்றனர். இதைதடுக்க பாதுகாப்பு வலை அமைக்கும் நிலைக்கு மராட்டிய அரசு சென்றுவிட்டது.

இவ்வாறு அசோக் சவான் கூறினார்.

மேலும் செய்திகள்