ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் வங்கிகள் மூலம் ரூ.3,782 கோடி கடன் வழங்க இலக்கு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் வங்கிகள் மூலம் ரூ.3,782 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக வங்கியாளர்கள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

Update: 2018-02-21 21:30 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வங்கியாளர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் (நபார்டு) மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தின் 2018-19-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த வங்கி கடன் திட்ட அறிக்கைக்கான கையேட்டினை வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் நடராஜன் பேசியதாவது:- தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தின் 2018-19-ம் ஆண்டிற்கான வளம் சார்ந்த வங்கி கடன் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுஉள்ளது. இந்த திட்ட அறிக்கையின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் வங்கி கிளைகளின் மூலம் வளம் சார்ந்த கடன் வழங்குவதற்காக ரூ.3,782 கோடியே 89 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்கானது நடப்பு ஆண்டு இலக்கை விட 9.2 சதவீதம் அதிகமாகும். தற்போது வெளியிடப்பட்ட வருடாந்திர கடன் திட்ட வரைவின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 2018-19-ம் ஆண்டில் வேளாண்மை கடன் உதவிகள் வழங்க ஏதுவாக ரூ.1,618 கோடியே 22 லட்சம், வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துணை தொழில்களுக்கு கடனுதவிகள் வழங்க ரூ.604 கோடியே 20 லட்சம், சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்காக ரூ.168 கோடியும், விவசாய கட்டமைப்புகளுக்காக ரூ.86 கோடியே 50 லட்சம், உணவு பதப்படுத்துவதற்கு ரூ.127 கோடியும், ஏற்றுமதி திட்டங்களுக்காக ரூ.42 கோடியும், கல்வி வளர்ச்சிக்காக ரூ.360 கோடியும், வீடு கட்டுவதற்கு ரூ.372 கோடியும், மீள்சக்திக்கு ரூ.20 கோடியே 21 லட்சமும், சமூக உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ரூ.47 கோடியும், இதர முன்னோடி திட்டங்களுக்காக ரூ.337 கோடியே 60 லட்சமும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு வரைவு திட்டமிடப்பட்டுஉள்ளது.

இந்த திட்டமானது தேசிய கொள்கைகளான “எல்லா நிலத்திற்கும் நீர்“ மற்றும் “ஒரு சொட்டு நீர், பல கட்டு பயிர்“ என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டுஉள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, நபார்டு வங்கி மேலாளர் மதியழகன், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா உதவி பொது மேலாளர் ஜெயசந்திரன், பாண்டியன் கிராம வங்கி தூத்துக்குடி மண்டல மேலாளர் தெய்வநாயகம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், சியாமளாநாதன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ராமநாதபுரம் கிளை மேலாளர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்