பாபநாசம் அணை நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது சுட்டெரிக்கும் கோடையை சமாளிக்குமா?

பாபநாசம் அணை நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது. எனவே சுட்டெரிக்கும் கோடையை சமாளிக்குமா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2018-02-21 20:45 GMT
விக்கிரமசிங்கபுரம்,

பாபநாசம் அணை நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது. எனவே சுட்டெரிக்கும் கோடையை சமாளிக்குமா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

குறைந்து வரும் தண்ணீர்

நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயத்துக்கு தாமிரபரணி ஆற்றின் வாயிலாக தண்ணீர் செல்கிறது. மேலும் தாமிரபரணி ஆற்றை நம்பி பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மக்களின் முக்கிய தேவையான குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.

இந்த நிலையில் இன்னும் 3 மாதங்கள் சுட்டெரிக்கும் வெயில் தான் இருக்கும். எனவே இந்த கோடை காலத்தை சமாளிக்க அணையில் தண்ணீரை தேக்கி வைத்து குடிநீருக்காக திறந்து விடுவது வழக்கம். ஆனால் தற்போது பாபநாசம் அணையில் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.

பொதுமக்கள் கவலை

சேர்வலாறு அணையிலும் நீர் இருப்பு இல்லை. ஆற்றில் தண்ணீரை திறந்து விட்டு காலி செய்து விட்டதால், மூன்று மாத கோடையை எப்படி சமாளிப்பது? என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கவலை அடைந்துள்ளனர்.

143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் நேற்று மாலை நிலவரப்படி 64.65 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 99.19 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 704.75 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

மற்றொரு அணையான மணிமுத்தாறு அணையின் கொள்ளளவு 118 அடி ஆகும். அங்கு 92.88 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 39 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 480 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது.

156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் தற்போதைய நீர்மட்டம் 19.68 அடியாகும். இது இருப்பு இல்லை என்பதற்கு சமமாகும். 85 அடி கொள்ளளவு கொண்ட கடனாநதி அணையில் 52.90 அடியாகவும், 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையில் 43.75 அடியாகவும் நீர்மட்டம் உள்ளது.

மேலும் செய்திகள்