பட்டுக்கோட்டை வர்த்தக சங்க தலைவர் மகன் அதிர்ச்சியில் சாவு

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பட்டுக்கோட்டை வர்த்தக சங்க தலைவர் மகன் அதிர்ச்சியில் இறந்தார். அதிகாரிகள் நெருக்கடியே அவரது சாவுக்கு காரணம் என்று அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்து உள்ளனர்.

Update: 2018-02-20 23:38 GMT
பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகர வர்த்தக சங்க தலைவராக இருப்பவர் ராமானுஜம்(வயது 84). இவருக்குச் சொந்தமாக எண்ணெய் மில், எண்ணெய் கடை மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவருடைய நிறுவனங்களில் நேற்று முன்தினம் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

ராமானுஜத்தின் தம்பி அருணாசலத்துக்கு சொந்தமான தேங்காய் கொப்பரை கொள்முதல் நிலையம் ஆகிய வற்றிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். 2-வது நாளான நேற்றும் இந்த சோதனை நடந்தது.

ராமானுஜத்தின் மூத்த மகன் ரவி(வயது 59). இவர் ராமானுஜத்துக்கு சொந்தமான நிறுவனங்களின் இயக்குனராகவும், ரோட்டரி சங்க பிரமுகராகவும் இருந்தார். தங்களது குடும்ப நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதால் அதிர்ச்சி அடைந்த ரவி நேற்று காலை திடீர் என மயங்கி விழுந்தார். அவர் மயங்கி விழுந்ததால் உடனடியாக அவரை சிகிச்சைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் அங்கிருந்த வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர்.

அவருடைய நிலைமை மோசமாகவே அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவர்கள் அனுமதித்தனர். இதனையடுத்து ரவியை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


இந்த நிலையில் ரவியின் சகோதரர் ராகவன், பட்டுக்கோட்டை நகர போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது எனது சகோதரர் திடீர் என்று மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டோம். ஆனால் அதிகாரிகள் அதைக்கண்டு கொள்ளவில்லை. மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மன்றாடியும் அவர்கள் உடனடியாக அனுமதிக்கவில்லை. நீண்ட நேரத்திற்கு பிறகே அனுமதி கொடுத்தனர். வருமானத் துறையினரின் அலட்சியப் போக்கினாலும், தக்க நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதிக்காததாலும் ரவி இறந்து விட்டார் என்று கூறியுள்ளார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பட்டுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்