துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்ட காங். கவுன்சிலரால் பரபரப்பு

சத்ரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்தபோது காங்கிரஸ் கவுன்சிலர் தனது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-02-20 22:56 GMT
பெங்களூரு,

மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாள் நேற்று முன்தினம் சிவாஜி ஜெயந்தி என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. தார்வாரிலும் நேற்று முன்தினம் பல்வேறு அமைப்பினர் சிவாஜி ஜெயந்தியை சிறப்பாக கொண்டாடினர். தார்வார் டவுனில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலைக்கு ஏராளமான அமைப்பினர், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி கவுன்சிலரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஞ்சுநாத் கதம், தனது ஆதரவாளர்களுடன் சிவாஜி சிலையை நோக்கி ஊர்வலமாக சென்றார். பின்னர் அவர், சத்ரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அந்த சமயத்தில், மஞ்சுநாத் கதம் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி 2 ரவுண்டு சுட்டார். துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதும் அந்தப்பகுதியில் இருந்தவர்கள் பீதி அடைந்தனர். மேலும் அவருக்கு அருகே நின்ற ஒருவர் கையில் வாளும் வைத்திருந்தார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஷாரகரா போலீஸ் எல்லையில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக யாரும் புகார் கொடுக்கவில்லை. மேலும் இதுதொடர்பாக போலீசாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்