நகராட்சி வரி உயர்வை கண்டித்து வில்லியனூர், பாகூர், திருபுவனை பகுதியில் கடையடைப்பு

நகராட்சி வரி உயர்வை கண்டித்து வில்லியனூர், பாகூர், திருபுவனை பகுதிகளில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2018-02-20 22:30 GMT
வில்லியனூர்,

புதுவையில் சமீபத்தில் தொழில்வரி, வணிக உரிமை கட்டணம், நகராட்சி கடைகளுக்காக வாடகை கட்டணம் போன்றவை பல மடங்கு உயர்த்தப்பட்டது. குடிநீர், மின்சார கட்டணம், சொத்து வரி போன்றவையும் கடுமையாக உயர்த்தப்பட்டது. இதுதவிர குப்பை அள்ளுவதற்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் அறிவித்தனர்.

அதன்படி புறநகர் பகுதிகளான பாகூர், வில்லியனூர், திருபுவனை, நெட்டப்பாக்கம், கரையாம்புத்தூர் பகுதிகளில் உள்ள சிறிய டீக்கடைகள், பெட்டிக்கடைகள், மற்றும் சிறிய மளிகை கடைகள் கூட மூடிக்கிடந்தன. இதனால் அந்தந்த பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

கடை அடைப்பு போராட்டத்தால் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளும் வெறிச்சோடிக் கிடந்தன. மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்லவில்லை.

பெரும்பாலான ஓட்டல்களும் மூடப்பட்டு இருந்தன. இதனால் சுற்றுலா வந்து இருந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். மாலையில் கடைகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் வியாபாரம் நடந்தது. இதன்பின் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இதையொட்டி பாதுகாப்புக்காக முக்கிய இடங்களில் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

மதகடிப்பட்டு வாரச்சந்தை வழக்கம் போல் இயங்கியது. திருக்கனூர், சேதராப்பட்டு பகுதியில் அனைத்துக் கடைகளும் திறந்து இருந்தன.

மேலும் செய்திகள்