மாத்தூர் அருகே ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 30 பேர் காயம்

மாத்தூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 30 பேர் காயம் அடைந்தனர். ஜல்லிக்கட்டில் காளையை அடக்கிய வீரர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள் பரிசாக கிடைத்தன.;

Update: 2018-02-20 22:30 GMT
மாத்தூர்,

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே லட்சுமணன்பட்டியில் பச்சநாச்சியம்மன், சங்கிலிமுத்து கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவில் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று கோவில் அருகே ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டது.

பின்னர் அதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னர் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து நேற்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதற்காக உள்ளூர் காளைகள் மட்டுமின்றி, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் காளைகள் அழைத்துவரப்பட்டன.

கால்நடை மருத்துவர்கள் கால்நடைகளை பரிசோதனை செய்து தகுதியான 800 காளைகளை ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி வழங்கினர். இதேபோல் டாக்டர்கள் குழுவினர் மாடுபிடி வீரர்களை பரிசோதனை செய்து தகுதியான 350 பேரை காளைகளை பிடிக்க அனுமதித்தனர். அதன்பின் காலை 8.30 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. அமைச்சர் விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்த காளைகளை யாரும் பிடிக்கவில்லை.

தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் சில காளைகள் பிடிபட்டன. சில காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டதும் சீறிப்பாய்ந்து யாரிடமும் பிடிபடாமல் பாய்ந்து சென்றன. சில காளைகள் தன்னை பிடிக்க வந்த வீரர்களிடம் இருந்து லாவகமாக தப்பி சென்றன. காளைகளை களத்தில் விடும்போது, இந்த காளைகளை பிடித்தால், என்னென்ன பரிசுகள் வழங்கப்படும் என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.

சில காளைகளின் பெயரில் அறிவித்தபடி பரிசு வழங்கப்படவில்லை என கூறி மாடுபிடி வீரர்கள் விழாக்குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஜல்லிக்கட்டின்போது, துள்ளிக்குதித்து வந்த காளைகள் முட்டியதில் 30 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதால் ஜல்லிக்கட்டு மைதானம் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜல்லிக் கட்டின்போது, பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை பிடித்த வீரர்களுக்கும் தங்கக்காசு, வெள்ளிக்காசு, பீரோ, கட்டில், மின்விசிறி, குத்துவிளக்கு, சில்வர் குடம், சைக்கிள்கள் பரிசாக வழங்கப்பட்டன. போட்டியில் கலந்து கொண்ட சில முரட்டு காளைகளை அடக்கும் வீரருக்கு சிங்கப்பூர் செல்வதற்கான விமான டிக்கெட் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த காளைகளை யாரும் அடக்காததால் விமான டிக்கெட் பரிசு யாருக்கும் கிடைக்கவில்லை.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ், போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், கோட்டாட்சியர் ஜெயபாரதி, குளத்தூர் தாசில்தார் கலைமணி, கிராம நிர்வாக அதிகாரிகள் முத்து, மாதேஸ்வரன் ஆகியோர் பார்வையிட்டனர். பாதுகாப்பு பணியில் பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில், மாத்தூர் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் உள்பட 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்