கோவைப்புதூரில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்

கோவைப்புதூர் பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

Update: 2018-02-20 22:00 GMT
கோவை,

கோவை மாநகர பகுதியில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பகுதியில் கோவைப்புதூரும் ஒன்று. இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மலையடிவாரத்தில் இந்த பகுதி இருப்பதாலும், இங்குள்ள சீதோஷ்ண நிலை, மாசு இல்லாத காற்று, அமைதியான சூழல் ஆகியவற்றால், இங்கு வீடு கட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மேலும் இந்தப்பகுதியில் கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. அதுபோன்று இங்கு போலீசாருக்கு பயிற்சி கொடுக்கும் மையமும் இருக்கிறது. இந்த நிலையில், கோவைப்புதூரில் கடந்த சில நாட்களாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீடு புகுந்து பணம்-நகை திருடப்பட்டது. வீட்டின் முன்பு இருந்த மோட்டார் சைக்கிளும் திருட்டு போனது.

அத்துடன் பொதுமக்கள் அதிகமாக கூடும் கியூ பிளாக் பகுதி, ராகவேந்திரா கோவில் அருகில் உள்ள ஒரு வீட்டிலும் திருட்டு ஆசாமிகள் கைவரிசை காட்டினர்.இதுதவிர வழிப்பறி சம்பவங்களும் அதிகமாக நடந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 10-க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களும், 5 வழிப்பறி சம்பவங்களும் நடந்து உள்ளன.

எனவே பொதுமக்கள் அச்சப்பட்டு பகலில்கூட வீட்டைவிட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கல்லூரிகளும் அதிகமாக இருப்பதால், மாணவர்கள் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக செல்வதால் விபத்துகளும் அதிகளவில் நடந்து வருகிறது.

இதுகுறித்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

கோவைப்புதூர் பகுதி மக்களுக்காக கடந்த 2008-ம் ஆண்டு அப்போதைய கோவை மாநகர போலீஸ் கமிஷனர் காந்திராஜன் இந்தப்பகுதியில் புறக்காவல் நிலையத்தை திறந்தார். இதனால் அங்கு காலை மற்றும் மாலை நேரத்தில் போலீசார் இருப்பார்கள். அத்துடன் அவர்கள் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். இதனால் குற்றச்சம்பவங்கள் நடப்பது குறைந்தது. மக்கள் நிம்மதியாக இருந்தனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திடீரென்று இந்த புறக்காவல் நிலையம் மூடப்பட்டதால், இங்கு போலீசார் ரோந்து வருவதும் குறைந்தது. பகல் நேரத்தில் போலீசாரை பார்க்கவே முடிவது இல்லை. சில நேரத்தில் போக்குவரத்து போலீசார் மட்டும் நின்று இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை பிடித்து அபராதம் விதிக்கிறார்கள். கொள்ளையர்கள் ஹெல்மெட் அணிந்து வருவதால் அவர்கள் போக்குவரத்து போலீசிடம் இருந்து எளிதில் தப்பித்து விடுகிறார்கள்.

எனவே மூடிக்கிடக்கும் புறக்காவல் நிலையத்தை திறந்து, அங்கு போலீசாரை நியமித்தால் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். இதனால் திருட்டு நடக்க வாய்ப்பு இல்லை. பொதுமக்களும் நிம்மதியாக இருப்பார்கள். கல்லூரி மாணவர்களும் இருசக்கர வாகனங்களில் மெதுவாக செல்ல போலீசார் அறிவுறுத்துவார்கள்.விபத்துகள் ஏற்படுவதும் குறையும். அதற்கு போலீஸ் கமிஷனர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்