பெரியகுளம் அருகே டிரைவருக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டதால் மின்கம்பத்தில் மோதிய அரசு பஸ், பயணிகள் உயிர் தப்பினர்

பெரியகுளம் அருகே டிரைவருக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டதால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி மின்கம்பத்தில் மோதி நின்றது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2018-02-20 22:00 GMT
பெரியகுளம்,

திண்டுக்கல்லில் இருந்து குமுளி நோக்கி நேற்று அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை திண்டுக்கல் மாவட்டம், நத்தம் உலுப்பக்குடியை சேர்ந்த ராஜாராம் (வயது 35) என்பவர் ஓட்டி சென்றார். பஸ்சில் 45 பயணிகள் இருந்தனர். அந்த பஸ் பெரியகுளம்-மதுரை சாலையில் தேனி மாவட்டம், எ.காமாட்சிபுரம் அருகே சென்ற போது, டிரைவர் ராஜாராமுக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டது. இதனால் பஸ்சை அவரால் தொடர்ந்து இயக்க முடியவில்லை.

இதையடுத்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பஸ் இறங்கியது. உடனே பஸ்சில் இருந்த பயணிகள் அய்யோ, அம்மா காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர். அதற்குள் அந்த பஸ் சிறிது தூரம் சென்று அங்குள்ள மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது.

இதில் அந்த மின்கம்பம் முற்றிலும் சேதமடைந்தது. அப்போது தானாகவே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தில் டிரைவர் ராஜாராம் காயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கம்பத்தில் இருந்து குமுளி சென்ற தனியார் பஸ் டிரைவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அந்த பஸ்சை சாலையோரத்தில் அவர் நிறுத்தினார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்