ரூ.18¼ கோடி செலவில் கட்டப்பட்டு வரும் நீதிமன்ற கட்டிட பணிகள்

திருவள்ளூரில் ரூ.18 கோடியே 18 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிட பணிகள் ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும் என மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-02-20 22:00 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரில் மகளிர் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம், காசோலைகள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம், விரைவு நீதிமன்றம் என நீதிமன்ற கட்டிடங்கள் திருவள்ளூரில் தனித்தனியாக ஆங்காங்கே இயங்கி வந்தது. இதனால் வழக்கு விசாரணைக்கு வருபவர்கள் ஒவ்வொரு நீதிமன்றத்திற்கும் செல்ல அவதிப்பட்டு வந்தனர். இதற்கு தீர்வாக அனைத்து நீதிமன்றங்களை ஒருங்கிணைத்து ஓரே இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை கட்டி அது பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் இந்த ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் ரூ.18 கோடியே 18 லட்சம் செலவில் மகளிர் நீதிமன்றம், விரைவு நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் என 7 கோர்ட்டு வளாகமும், அதோடு மட்டுமல்லாமல் பொதுமக்களும், வக்கீல்களும் பயன்படுத்தும் விதமாக தனித்தனியாக லிப்ட் வசதி, கழிவறை வசதி, வக்கீல்களுக்கான கட்டிடங்கள் என அரசு நிதி ஒதுக்கி அந்த பணி தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த கோர்ட்டு வளாகத்திற்கு அருகிலேயே ரூ.5 கோடியே 32 லட்சம் மதிப்பில் நீதிபதிகள் குடியிருப்புகள், துணை நீதிபதிகள் குடியிருப்புகளும் கட்டும் பணி தொடர்ந்து முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்த பணிகளை நேற்று திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி டி.இளங்கோவன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டவர்களிடம் பணியை தரமானதாகவும், விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து ஒவ்வொரு வளாகத்திற்கும் சென்று ஆய்வு மேற்கொண்ட அவர் நடைபெற்று வரும் பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அப்போது அங்கிருந்தவர்களிடம் புதிய கோர்ட்டு வளாகம் அமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த வரைபடத்தை கொண்டு பணிகள் எந்த அளவு முடிக்கப்பட்டுள்ளது. பணியின் தன்மைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிய ஓருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்டும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. வருகிற ஜூன் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) அசோக்குமார், உதவி செயற்பொறியாளர்கள் புண்ணியக்கோட்டி, உதவி பொறியாளர்கள் நாகராஜன், ஞானசேகர், வக்கீல்கள் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் சீனிவாசன், செயலாளர் ஆனந்தகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்