திருப்பத்தூர்-பட்டமங்களம் இடையே சாலையோர பள்ளங்களால் விபத்து அபாயம்

திருப்பத்தூரில் இருந்து பட்டமங்களம் செல்லும் சாலையின் ஓரத்தில் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள பள்ளங்களை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-02-20 21:30 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூரில் இருந்து கண்டரமாணிக்கம் மற்றும் பட்டமங்களம் செல்லும் சாலையில் தம்மம் பகுதியில் சாலையோரத்தில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. தம்மம் பகுதி மட்டுமின்றி இந்த சாலையின் மற்ற பகுதிகளிலும் பள்ளங்கள் உள்ளன.

இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் விபத்துகளை சந்திக்கும் அபாய நிலை உள்ளது. திருப்பத்தூர்-பட்டமங்களம் சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பட்டமங்களம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் இந்த சாலை வழியாகவே செல்கின்றனர். மேலும் ஆத்தங்கரைப்பட்டி, வாணியங்காடு, வெளியாத்தூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் இந்த சாலை வழியாகவே தங்களது ஊர்களுக்கு சென்றுவருகின்றனர்.

திருப்பத்தூர்-பட்டமங்களம் சாலை குறுகலாக இருப்பதால் பஸ், லாரி உள்ளிட்டவை வரும்போது எதிரே வரும் வாகனங்கள் சாலையைவிட்டு இறங்கி வழிவிட வேண்டிய நிலை உள்ளது. அப்போது சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் வாகனங்கள் சிக்கி விபத்தை சந்தித்து வருகின்றன.

திருப்பத்தூரில் இருந்து பட்டமங்களம், கண்டரமாணிக்கம் வரை சாலையோரத்தில் அனேக இடங்களில் புதைகுழிபோன்று ஏராளமான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனே சென்றுவருகின்றனர். எனவே அந்த குழிகளை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் குறுகலாக உள்ள திருப்பத்தூர்-கண்டரமாணிக்கம்-பட்டமங்களம் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்