கத்திமுனையில் பணம் பறிக்க முயற்சி வாலிபர்கள் 6 பேர் கைது

வேளச்சேரியில் டிபன் கடைக்காரரிடம் கத்திமுனையில் பணம் பறிக்க முயன்ற வாலிபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-02-20 21:45 GMT
ஆலந்தூர்,

சென்னை வேளச்சேரி சார் பதிவாளர் அலுவலகம் அருகே பத்திரம் எழுதும் கடை நடத்தி வந்த மடிப்பாக்கத்தை சேர்ந்த ஜெய்முருகன் மற்றும் அவரது மனைவியை ஒரு மர்ம கும்பல் வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இதேபோல் வேளச்சேரி பகுதிகளில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி மர்ம நபர்கள் சிலர் வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதில் தொடர்புடைய குற்ற வாளிகளை பிடிக்க அடையாறு போலீஸ் துணை கமிஷனர் ரோகித் நாதன் உத்தரவின் பேரில் கிண்டி உதவி கமிஷனர் பாண்டியன், வேளச்சேரி இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் வேளச்சேரி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வேளச்சேரி 100 அடி சாலையில் டிபன் கடை நடத்தி வரும் காமராஜ் என்பவரிடம் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த கும்பலை நோக்கி விரைந்தனர்.

அந்த கும்பலை சேர்ந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் 6 பேரையும் விரட்டி சென்று மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்களை சோதனை செய்த போது அரிவாள் மற்றும் கத்திகள் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அவர்கள் செங்குன்றத்தை சேர்ந்த முத்துசரவணன்(27), மணி (27), சதீஷ்(26), சங்கர்(26), ராஜ்குமார் (26), ரோகித் (28) என தெரியவந்தது. இதனையடுத்து 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 6 அரிவாள், 3 கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட கும்பல் வேளச்சேரியில் தனியாக நடந்து சென்றவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்ததை ஒப்புக் கொண்டனர். மேலும், இவர்களின் மீது சோழவரம், மாதவரம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

மேலும் செய்திகள்