ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.2 லட்சம் திருட்டு மர்ம நபர்களை போலீஸ் தேடுகிறது
நாகர்கோவிலில் பட்டப்பகலில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.2 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில்,
நெல்லை மாவட்டம் பெருமணல் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்லின் பேன்சி (வயது 39). இவருடைய உறவினர், நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஜோஸ்லின் பேன்சி நேற்று நாகர்கோவிலுக்கு வந்து, அவருடைய உறவினர் வீட்டுக்கு சென்று கடனாக ரூ.2 லட்சம் வாங்கியதாக தெரிகிறது.
அவர் பணத்தை தனது கைப்பையில் வைத்துக்கொண்டு, நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து அவர் பிற்பகல் 3 மணி அளவில் அவருடைய ஊருக்கு செல்லும் பஸ்சில் ஏறினார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர் நின்றுகொண்டு பயணம் செய்தார். பஸ், கோட்டார் ரெயில் நிலையம் வந்ததும் ஜோஸ்லின் பேன்சிக்கு உட்கார்வதற்கு இருக்கை கிடைத்தது. அதில் உட்கார்ந்த பிறகு அவர் கைப்பையை பார்த்தார். அப்போது கைப்பை திறந்து இருந்தது. அதில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை காணவில்லை. இதைப் பார்த்தும் அவர் அதிர்ச்சியடைந்தார். ஓடும் பஸ்சில் யாரோ மர்ம நபர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஜோஸ்லின் பேன்சியின் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
பின்னர் இதுபற்றி அவர் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஓடும் பஸ்சில் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.