கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் வெங்கடேஷ். கோவில்களில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்துசமய அறநிலையத்துறை அதிகாரி வெங்கடேஷ் கூறினார்.

Update: 2018-02-18 23:45 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இந்து கோவில்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகள், கோவில்களில் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க எடுக்கப்பட்டு வரும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள், பூசாரிகளுக்கு வழங்கப்படும் நிதிஉதவி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் வெங்கடேஷ் ‘தினத்தந்தி’ நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

கேள்வி:- நாமக்கல் மாவட்டத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் எத்தனை?

பதில்:- நாமக்கல் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் பட்டியலை சேர்ந்த 95 கோவில்களும், பட்டியலில் சேராத 899 கோவில்களும் உள்ளன.

கேள்வி:- நமது மாவட்டத்தில் எத்தனை கோவில்களில் அன்னதான திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது?

பதில்:- நாமக்கல் மாவட்டத்தில் தற்போது 17 கோவில்களில் அன்னதான திட்டத்தின் கீழ் நாள்தோறும் சுமார் 700 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

கேள்வி:- கோவில் உண்டியல் எண்ணும் பணி வீடியோவில் பதிவு செய்யப்படுகிறதா?

பதில்:- நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில், வருமானம் அதிகம் வரக்கூடிய பட்டியலில் சேர்ந்த கோவில்களில் உண்டியல் எண்ணும் பணி வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.

கேள்வி:- மாவட்டத்தில் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் எத்தனை ஏக்கர் உள்ளன? அவற்றில் எத்தனை ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு உள்ளது?

பதில்:- நாமக்கல் மாவட்டத்தில் பட்டியலில் சேராத கோவில்களுக்கு சொந்தமான நன்செய் நிலங்கள் 297.05 ஏக்கரும், புன்செய் நிலங்கள் 4,918.14 ஏக்கரும், கட்டிடங்கள் 33 ஆயிரத்து 903 சதுர அடியும், மனைகள் 2 லட்சத்து 25 ஆயிரத்து 304 சதுர அடியும் உள்ளன. ஆக்கிரமிப்பில் உள்ள 48.25 ஏக்கர் நிலத்தை மீட்கவும், 8,10,511 சதுர அடி பரப்பளவு உள்ள மனை மற்றும் கட்டிடங்களை மீட்கவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

கேள்வி:- கோவில்களை மேம்படுத்த புதிய திட்டங்கள் ஏதேனும் உள்ளதா?

பதில்:- நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களை மேம்படுத்த நடப்பு நிதியாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் உள்ள 51 கோவில்களிலும், 22 கிராமப்புற கோவில்களிலும் என மொத்தம் 73 கோவில்களில் தலா ரூ.1 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது நாமக்கல் மாவட்டத்தில் 277 நலிவடைந்த கோவில்களில் ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் தினசரி ஒருகால பூஜை நடைபெற்று வருகிறது. உண்டியல் மற்றும் உற்சவ விக்கிரகங்கள் உள்ள அனைத்து கோவில்களிலும் திருடர் எச்சரிக்கை மணி மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணி நடைபெற்று வருகிறது.

நாமக்கல் உதவி ஆணையர் சரகத்தில் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சிறிய கோவில்களுக்கு பூஜை உபகரணங்கள் வழங்கும் பொருட்டு, 370 கோவில்களுக்கு பூஜை உபகரணங்கள் கடந்த நிதியாண்டில் வழங்கப்பட்டது.

கேள்வி:- கோவிலில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது?

பதில்:- நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க, குறிப்பாக மின் கசிவு ஏற்படாமல் இருக்க ‘பிரேக்கர்’ வசதி பொருத்த நடவடிக்கையும், கோவில் வளாகம் மற்றும் மதில்சுவரை ஒட்டி உள்ள கடைகளை அகற்றவும், பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து கோவில்களிலும் இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கேள்வி:- இதுவரை பூசாரிகளுக்கு எத்தனை பசுக்கள் வழங்கப்பட்டு உள்ளன?

பதில்:- நாமக்கல் மாவட்டத்தில் கோவில்களுக்கு தானமாக வரும் பசுக்கள் ஒருகால பூஜை திட்டத்தில் உள்ள பூசாரிகளுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் இதுவரை 47 பசுக்கள் பூசாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன.

மேலும் கிராம கோவில் பூசாரிகள் நலத்திட்டத்தின் மூலம் இத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத கோவில்களில் பூசாரிகளாக பணிபுரிந்து வருபவர்களை கிராம கோவில் பூசாரிகள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக இணையதளத்தின் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு, அவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையும் மற்றும் நலவாரியத்தின் மூலம் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தற்போது 79 ஓய்வு பெற்ற கிராம கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்