ஒற்றுமையாக இருங்கள் என பிரதமர் கூறினால் தவறு இல்லை

ஒற்றுமையாக இருங்கள் என பிரதமர் கூறினால் தவறு இல்லை, அது மக்கள் மத்தியில் பிரதமருக்கு நன்மதிப்பை உருவாக்கி உள்ளது என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் எம்.பி. விளக்கம் அளித்துள்ளார்

Update: 2018-02-18 22:45 GMT
வாழப்பாடி,

வாழப்பாடி அருகே புத்திரகவுண்டன்பாளையம் பகுதியில் 108 அடி உயர முருகன் சிலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு சிலையை சுற்றி கோவில் கட்டும் பணி தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்க பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், டெல்லி மேல்சபை எம்.பி.யுமான இல.கணேசன் வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி சொன்னதால் எடப்பாடி பழனிசாமி உடன் இணைந்தேன் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியது உண்மை தானா? என கேள்வியை நான் எழுப்ப விரும்பவில்லை. ஒற்றுமையாக இருங்கள் என பிரதமர் சொன்னதில் தவறு இல்லை. இதனால் பிரதமருக்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பு உருவாகி உள்ளது.

பத்திரிகையில் வந்த செய்திகளை தேடி பார்த்தால் ஒன்று புரியும். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏதோ அ.தி.மு.க.வை பிளவுபடுத்தி பிரித்தாளும் சூழ்ச்சியில் பிரதமர் இறங்கியிருக்கிறார் என்றெல்லாம் எழுதினார்கள். தமிழகத்தில் யாரோ ஒருவர் இறந்ததாலோ, யாரோ ஒருவர் சிறைக்கு சென்றதாலோ, யாரோ ஒருவர் நோய் வாய்ப்பட்டு முடங்கி விட்டதாலோ, ஏதோ ஒரு கட்சி பிளவு பட்டதாலோ பா.ஜனதா வளரவேண்டும் என நினைக்கிறவர்கள் நாங்கள் அல்ல. எங்களது திறமையால், சாதனையால் மெல்ல, மெல்ல வளரக்கூடிய கட்சி என்பது நிரூபணம் ஆகிறது.

தமிழத்தில் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். நிறுவனம் தொடங்க சில தகுதிகள் வேண்டும். ஆனால் அரசியல் கட்சி தொடங்க அப்படி எதுவும் தேவையில்லை. கமல், ரஜினி என்ன செய்கிறார்கள் என பொறுத்திருந்து பார்த்து தான் கருத்து சொல்ல முடியும். காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் எனக்கு உடன்பாடு இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரத்திற்குள் அமைக்கவேண்டும் என்பதில் மத்திய அரசுக்கு எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. மத்திய அரசுக்கு சட்ட வல்லுனர்கள் என்ன ஆலோசனை வழங்குகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

சேலம் தாதகாப்பட்டியில் பா.ஜனதா கட்சியின் தமிழ் வளர்ச்சிப்பிரிவு சார்பில் தமிழ் இலக்கிய பட்டிமன்றம் நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகர மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் சின்னதுரை முன்னிலை வகித்தார். பிரதமர் மோடி ஆட்சியில் பயன் அடைபவர்கள் ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

இதில் ஆண்களா? என்ற தலைப்பில் கே.டி.ராகவன், முனைவர் பேகம் ஆகியோரும், பெண்களா? தலைப்பில் பிரபாகரன், வளர்மதி ஆகியோரும் பேசினார்கள். பட்டிமன்ற நடுவர் இல.கணேசன் எம்.பி., பிரதமர் மோடி ஆட்சியில் அதிகம் பயன்பெறுபவர்கள் பெண்களே என தீர்ப்பு கூறினார். இதில் முன்னாள் மாநில தலைவர் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்