சென்னிமலை அருகே உலக நன்மைக்காக 48 நாட்கள் மவுன விரதம் தொடங்கிய சித்தர் நீர் ஆகாரங்களை மட்டுமே உட்கொள்கிறார்
சென்னிமலை அருகே உலக நன்மைக்காக சித்தர் ஒருவர் 48 நாட்கள் மவுன விரதத்தை தொடங்கினார். நீர் ஆகாரங்களை மட்டுமே உட்கொள்கிறார்.
சென்னிமலை,
ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் சிவஞான சித்தர்கள் பீடத்தை சேர்ந்தவர் சரவணசுவாமி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு மழை வேண்டி சென்னிமலை அருகே உள்ள வாய்ப்பாடி கொமரமலை அடிவாரத்தில் குடில் அமைத்து 48 நாட்கள் தினமும் காலை, மாலையில் வருண பகவானை வேண்டி யாகம் நடத்தினார்.
இந்தநிலையில் சென்னிமலை அருகே உள்ள முருங்கத்தொழுவு மணிமலை கருப்பணசாமி கோவிலில் உலக நன்மைக்காக சரவணசுவாமி 48 நாட்கள் மவுன விரதத்தை நேற்று தொடங்கினார்.
சுமார் 365 படிக்கட்டுகளுடன் மலையின் மேல் உள்ள கருப்பணசாமி கோவிலில் நேற்று காலை சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து விவசாயி துரைசாமி என்பவர் மவுன விரதத்தை தொடங்கி வைத்தார். அப்போது கருப்பணசாமியின் சன்னதி முன்பாக சரவணசுவாமி மவுன விரதத்தை தொடங்கினார்.
தொடர்ந்து 48 நாட்களுக்கு உணவு எதுவும் சாப்பிடாமல், நீர் ஆகாரங்களை மட்டும் உட்கொள்ளும் இவர் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி அன்று 48-வது நாளில் மவுன விரதத்தை நிறைவு செய்கிறார்.
மவுனவிரதத்துக்கு முன்பாக சரவணசுவாமி கூறும்போது, ‘உலக நன்மை, நதிகள் இணைப்பு விரைவில் நடக்க வேண்டும், அனைத்து குழந்தைகளும் கல்வி அறிவு பெற வேண்டும், விவசாயம் செழிப்பதுடன் மற்ற தொழில் வளங்களும் பெருக வேண்டும், பொதுமக்கள் நோயின்றி வாழ வேண்டும் என்ற பல வேண்டுதல்களை வலியுறுத்தி 48 நாட்கள் மவுன விரதத்தை சித்தர்கள் உத்தரவுப்படி இருக்க உள்ளேன்’ என்றார்.