மத்திய அரசை எதிர்ப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் துணிந்து விட்டாரா?

மத்திய அரசை எதிர்ப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் துணிந்து விட்டாரா? என்பது குறித்து ஜி.ராமகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.;

Update:2018-02-19 04:00 IST
தூத்துக்குடி,

மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசை பொறுத்தவரை நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய அரசாக இருந்தால் அதனை சீர்குலைப்பார்கள். அல்லது அந்த அரசை விலைகொடுத்து தனதாக்க முயற்சி செய்வார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான நடவடிக்கை உள்ளது. குறிப்பாக புதுச்சேரியில் கவர்னர் தனி ராஜ்யம் நடத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பலகீனமான தலைமையை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தங்கள் திட்டங்களை செயல்படுத்தவும், காலூன்றவும் மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. ஒட்டுமொத்தமாக தமிழக மக்களுக்கு விரோதமான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது.

அதில் ஒரு அம்சம்தான் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து மீண்டும் இணைந்து இருப்பது ஆகும். ஓ.பன்னீர்செல்வம் இன்றைக்காவது பிரதமர் கூறியதால் இணைந்ததாக தெரிவித்து உள்ளார். ஆனால் அவர் மத்திய அரசின் நடவடிக்கை எதையும் எதிர்க்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் தானாக வந்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்து உள்ளார். ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இணைந்ததை ஒரு சந்தர்ப்பவாதமான இணைப்பு என்பதுதான் தமிழக மக்களின் கருத்து.

பிரதமர் தமிழகத்தில் அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளையும் கட்டப்பஞ்சாயத்து செய்து இணைத்து வைத்தார் என்று எல்லோரும் கூறினோம். அன்று வாய் திறக்காத ஓ.பன்னீர்செல்வம், இன்று பிரதமர் இணையுமாறு கூறினார் என்று தெரிவித்து உள்ளார். அதற்கு என்ன அவசியம் என்பது ஓரிரு நாளில் வெளியாகும். இதன் மூலம் மத்திய அரசை எதிர்ப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் துணிந்து விட்டதாக நான் கருதவில்லை. மோடியை விமர்சிப்பதற்கு தயாராகி விட்டதாகவும் கருதவில்லை. வேறு ஏதோ பேரம் நடந்து கொண்டு இருக்கிறது. போகப் போக தெரியவரும்.

நாடு முழுவதும் எல்லா மாநிலங்களிலும் சரக்கு மற்றும் சேவை வரியால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. ஆனால் தமிழகத்தில் கவர்னர் உரையில் ஜி.எஸ்.டி. வரியை சுமுகமாக அமலாக்கி உள்ளோம், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்க்கவில்லை என்று கூறி உள்ளார். கீழடி அகழாய்வு, நீட் தேர்வில் அணுகுமுறை இவ்வாறு தமிழக மக்களை பாதிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும்போது, அதனை கேட்பதற்கு திராணி இல்லாத அரசாக அ.தி.மு.க. அரசு உள்ளது.

ஸ்டெர்லைட் நிறுவனத்தை பொறுத்தவரை விரிவாக்கத்துக்கு அனுமதிக்க கூடாது. அந்த நிறுவனமே தேவை இல்லை என்ற கருத்து மக்கள் மத்தியில் இருக்கும் நிலையில், விரிவாக்கத்துக்கு அனுமதிக்க கூடாது. தமிழ்நாட்டில் புதிய பஸ் வாங்குவது, வாக்கி டாக்கி வாங்குவது போன்ற பல பிரச்சினைகளில் ஊழல் நடந்து வருகிறது. அதனை விசாரிக்க வேண்டும்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மோசடி நடந்து உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நிரவ் மோடி, பிரதமர் மோடியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு இருக்கிறார். சி.பி.ஐ. விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்