பெரியவர்கள், பெற்றோர் அறிவுரையை மாணவர்கள் ஏற்று நடக்க வேண்டும் சக்தி அம்மா பேச்சு

பெரியவர்கள், பெற்றோர் அறிவுரையை மாணவர்கள் ஏற்று நடக்க வேண்டும் என்று ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் நடந்த சரஸ்வதி யாகத்தில் சக்தி அம்மா கூறினார்.

Update: 2018-02-18 22:15 GMT
வேலூர்,

வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் ‘வித்யாநேத்ரம்’ என்ற திட்டத்தின் கீழ் 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் தேர்வில் சிறப்பாக வெற்றி பெற ஸ்ரீமேதா, சூக்த யாகம் எனப்படும் சரஸ்வதி யாகம் நேற்று நடந்தது. சக்தி அம்மா தலைமை தாங்கினார். நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி, ஸ்ரீபுரம் பொற்கோவில் இயக்குனர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாராயணி பீட மேலாளர் சம்பத் வரவேற்றார்.

நிகழ்ச்சியின்போது யாகத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பேனாவை சக்தி அம்மா தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கினர். பின்னர் சக்தி அம்மா பேசியதாவது:-

சிறுவர்கள், மாணவர்களுக்கு தற்போதைய சூழ்நிலையில் பிடிக்காத ஒன்று அறிவுரைகள். பாகற்காய் கசப்பது போன்று அறிவுரைகள் மாணவர்களுக்கு கசந்து காணப்படும். இதன் சிறப்பை ஒவ்வொரு மாணவரும் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் பெரிதும் உதவியாக இருப்பது அறிவுரைகள் தான். தாங்கள் பட்ட கஷ்டத்தை யாரும் படக்கூடாது என்பதற்காக தான் பெரியவர்கள், பெற்றோர் அறிவுரை கூறுகின்றனர்.

அதனை நீங்கள் ஏற்று அதன்படி நடக்க வேண்டும். பெற்றோர், பெரியவர்கள் தங்கள் அனுபவங்களைதான் உங்களுக்கு அறிவுரையாக சொல்கின்றனர். அதனை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். மாணவர்களின் சந்தோஷத்தை அறிவுரைகள் பறிக்காது.

குழந்தைகள், மாணவர்களுக்கு மட்டுமே அறிவுரை கிடைக்கும். அதை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்தால் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வரலாம். படிக்கும் காலத்தில் மட்டுமே சரஸ்வதியின் அனுக்கிரகம் கிடைக்கும் என்பதல்ல. வாழ்க்கை முழுவதும் அவரது அனுக்கிரகம் கிடைத்தால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். வேத மந்திரங்களுக்கு தனி சக்தி உள்ளது. வேத மந்திரங்களை தினமும் சொல்லும்போது நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் அதிக சக்தியுடன் இயங்கும்.

வேதமந்திரங்களை முறையாக தினசரி உச்சரித்து வந்தால் கவனச்சிதறல் இன்றி கல்வி வளர்ச்சி அடையலாம். இது விஞ்ஞானப்பூர்வ உண்மையாகும். மாணவர்கள் நல்ல முறையில் படித்து நல்ல குடிமகனாக இருந்து நாட்டிற்கும், சமுதாயத்துக்கும் சேவை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், “பொதுத்தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளன. மாணவர்கள் விடாமுயற்சியுடன் பாடங்களை படிக்க வேண்டும். இதுவரை சரியாக படிக்காதவர்கள் கூட தற்போது முயற்சி செய்து நன்றாக படித்தால் தேர்வில் தேர்ச்சி அடைந்து விடலாம். மாணவர்கள் விடாமுயற்சி, தன்னம்பிக்கையுடன் படிக்க வேண்டும். இந்தியாவில் 40 சதவீதம் இளைஞர்கள் உள்ளனர். இளைஞர்கள் தான் நாட்டின் மிகப்பெரிய சக்தியாகும். தற்போதைய சூழலில் திறமை உள்ளவர்கள் தான் வெற்றி பெற முடியும். போட்டி உலகில் தன்னம்பிக்கையுடன் படித்தால் வெற்றி பெறலாம். டெங்கு ஒழிப்பு பணியில் கடந்தாண்டு பள்ளி மாணவர்களின் பங்களிப்பு அதிகமாக காணப்பட்டது. மாணவர்கள் அவர்களின் பெற்றோர், உறவினர்கள், அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களுக்கு டெங்கு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்” என்றார்.

இதில் வேலூர் தாசில்தார் பாலாஜி, வேலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், மாணவர்களின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், “தமிழக சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் தாய்-சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ இடங்களை (சீட்) அதிகரித்து ஏராளமான இடங்களை பெற்றுள்ளோம். இந்தாண்டு முதுநிலை மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்களை உயர்த்தித் தர கோரிக்கை வைத்துள்ளோம். அதனை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். தேசிய அளவிலான மருத்துவ ஆணையத்தை தமிழக அரசின் சார்பில் எதிர்க்கிறோம். இந்தாண்டு தொற்றா நோய்கள் குறித்த சவால்கள் அதிகமாக உள்ளது. இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை தமிழகத்தில் அமையாததற்கு மாநில அரசு காரணம் என்று மத்திய அரசு கூறுவது தவறானது. அதற்கு மத்திய அரசு தான் பொறுப்பாகும். மேலும் திருநங்கைகள் மருத்துவ படிப்பில் சேர்ந்து படிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.

மேலும் செய்திகள்