தமிழக உள்ளாட்சி தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டி - சரத்குமார்

தமிழக உள்ளாட்சி தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என மும்பை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் சரத்குமார் கூறினார்.

Update: 2018-02-18 23:00 GMT
மும்பை,

சமத்துவ மக்கள் கட்சியின் மும்பை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று தாராவியில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் மைக்கேல்துரை முன்னிலை வகித்தார். இதில், சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் சரத்குமார் கலந்துகொண்டு பேசியதாவது:-

கடந்த காலங்களில் பல்வேறு மக்கள் பிரச்சினைகளில் கருத்து கூட சொல்லாத ரஜினி, கமல் இன்று உள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசியலுக்கு வந்துள்ளனர். இந்த நேரத்தில் மிக தீவிரமாக செயல்படவேண்டும். 11 ஆண்டுகளாக நான் அரசியலில் உள்ளேன்.

மராட்டியத்தில் மாநகரம் மற்றும் வார்டு வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியும் நடந்து வருகிறது. தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும். நானும், ராதிகாவும் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவோம். நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சியை பலப்படுத்த கடுமையாக உழைக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து மாநில துணை பொதுச்செயலாளர்கள் சுந்தர், ஈஸ்வரன் ஆகியோர் ஆலோசனை உரை ஆற்றினர். முடிவில் மும்பை மாநகர செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார். விழாவில் புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்