தாளவாடி பகுதியில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை

தாளவாடி பகுதியில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். மேலும் விவசாய நிலங்களில் உள்ள பயிர்களில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார்கள்.

Update: 2018-02-18 21:30 GMT
பவானிசாகர், 

சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி மலைப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து 830 மீட்டர் உயரம் கொண்டதாகும். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பயிரிடப்படும் பயிர்களான கேரட், பீட்ருட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் போன்ற பயிர்களை தாளவாடியில் விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். மேலும் தாளவாடி பகுதிக்கு உள்பட்ட மல்லன்குழி, தமிழ்புரம், கெட்டவாடி, திகினாரை, நெய்தாளபுரம், சூசைபுரம் ஆகிய பகுதி விவசாயிகள் அதிகஅளவில் முட்டை கோசை சாகுபடி செய்து உள்ளார்கள். ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் நாற்றுகள் சாகுபடி செய்யப்படுகிறது. 3 மாத பயிரான முட்டைகோஸ் அறுவடை பணிகள் நடந்தது. இந்த முட்டைகோஸ்கள் விற்பனைக்காக கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் கேரளா ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இதில் கடந்த வாரம் முட்டைகோசை கிலோ ஒன்று ஒரு ரூபாய்க்கு விவசாயிகள் விலைக்கு கேட்டனர். தற்போது முட்டைகோஸ் கிலோ ஒன்றுக்கு 1 ரூபாய் 50 காசு முதல் 2 ரூபாய் வரை விலைக்கு கேட்கப்படுகிறது. அதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

தாளவாடி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் ஏக்கர் கணக்கில் முட்டைகோசை பயிரிட்டு உள்ளோம். 3 மாத கால பயிரான முட்டைகோஸ் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வியாபாரிகள் முட்டைகோசை குறைந்த விலைக்கு கேட்கிறார்கள். விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால் முட்டைகோசை அறுவடை செய்பவர்களுக்கு கூலி கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் பயிருக்கு மருந்து தெளித்தல், களை எடுத்தல் போன்ற பணிக்காக ரூ.45 ஆயிரம் வரை செலவு ஆகிறது. தற்போது வியாபாரிகள் கேட்கும் விலைக்கு பார்த்தால் 1 ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படும்.

தற்போது தோட்டத்தில் பயிரிட்டு உள்ள முட்டைகோசை மாடுகள் தின்பதற்காக விட்டுஉள்ளோம். மேலும் ஏராளமான விவசாய நிலங்களில் மாடுகளை மேய்ச்சலுக்காக விடப்பட்டு உள்ளது. அதனால் தாளவாடி பகுதியில் முட்டைகோஸ் பயிரிட்டு உள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் வேதனையுடன் கூறினார்கள்.

மேலும் செய்திகள்