தண்ணீர் குறைவாக உள்ளதால் கடந்த 2 ஆண்டுகளாக வெள்ளோடு சரணாலயத்துக்கு வெளிநாட்டு பறவைகள் வரவில்லை
தண்ணீர் குறைவாக உள்ளதால் கடந்த 2 ஆண்டுகளாக வெள்ளோடு சரணாலயத்துக்கு வெளிநாட்டு பறவைகள் வரவில்லை.;
ஈரோடு,
ஈரோடு அருகே வெள்ளோட்டில் பறவைகள் சரணாலயம் உள்ளது. சுமார் 210 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்து உள்ள இந்த சரணாலயத்தில் பல்வேறு வகையான பறவைகள் வசித்து வருகின்றன. இதேபோல் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இனப்பெருக்கத்திற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வந்து செல்வதும் வழக்கம்.
இயற்கை எழிலுடன் அமைந்து உள்ள பறவைகள் சரணாலயத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த சரணாலயத்தில் தற்போது பெரிய நீர் காகம், சிறிய நீர் காகம், பாம்பு தாரா, ஆமைக்கோழி, கொசுஉள்ளான், வண்ணநாரை, குருட்டு கொக்கு, சாம்பல் நாரை, ஆள்காட்டி பறவை, அலகு புள்ளி மூக்கு வாத்து, காடநாரை, கரண்டிவாயன், அகிலான் மூக்கன், கருங்கை வாயன் உள்பட 100-க்கும் மேற்பட்ட வகையை சேர்ந்த பறவைகள் உள்ளன.
இந்த சரணாலயத்துக்கு ஈரோடு மற்றும் அருகே உள்ள மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களில் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இங்கு வந்து ஆனந்தமாக பொழுதை கழித்து விட்டு செல்கின்றனர்.
இதுகுறித்து வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தின் பொறுப்பாளர்கள் கூறும்போது, ‘வெள்ளோடு பறவைகள் சரணாலய ஏரியில் தண்ணீர் குறைவாகத்தான் உள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் வரவில்லை.
ஏரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் நிரம்பி இருந்தால் அதிகப்படியான வெளிநாட்டு பறவைகள் வர வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு பறவைகள் வந்தால் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். எனவே வெள்ளோடு பறவைகள் சரணாலய ஏரியை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.