மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையே ரெயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்

மயிலாடுதுறை- தரங்கம்பாடி இடையே ரெயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று தமிழக கவர்னரிடம், பா.ஜனதா கட்சியினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.;

Update: 2018-02-18 22:30 GMT
திருக்கடையூர்,

நாகை மாவட்டம், பொறையாறு அருகே திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சாமி தரிசனம் செய்ய வந்தார். அவருக்கு பா.ஜனதா கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பா.ஜனதா கட்சி நாகை மாவட்ட பொதுச் செயலாளர் அமுர்தவிஜயகுமார் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் விஜயஸ்ரீ, ஒன்றிய தலைவர் பாலாஜி ஆகியோர் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடிக்கு கடந்த 1926-ம் ஆண்டு முதல் ரெயில் சேவை தொடங்கப்பட்டு ஒரு நாளைக்கு 4 முறை இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் சேவையால் தரங்கம்பாடிக்கு வரும் சுற்றுலா பயணிகள், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பயனடைந்து வந்தனர். இந்த ரெயில் சேவையை கடந்த 1986-ம் ஆண்டு அப்போதைய மத்திய அரசு திடீரென நிறுத்தியது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் மயிலாடுதுறை- தரங்கம்பாடி இடையே ரெயில் சேவையை தொடங்குவோம் என்று வாக்குறுதி கொடுக்கின்றனர். ஆனால், அதனை நிறைவேற்றுவதில்லை. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மத்திய பட்ஜெட்டில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டது.

பிரதமர் நரேந்திரமோடியின் சிறப்பான ஆட்சியில் மீண்டும் ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போது தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பெரும்பாலான மக்கள் பஸ் போக்குவரத்தை தவிர்த்து தற்போது ரெயில்களில் அதிக அளவில் சென்று வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் மேற்கண்ட வழித்தடத்தில் ரெயில் சேவையை தொடங்கினால் பயனுள்ளதாக இருக்கும். மேலும், நாகை மாவட்ட பகுதிக்கு வரும் டென்மார்க், ஜெர்மன், சிங்கப்பூர், மலேசியா, பெல்ஜியம், பிரான்சு, இங்கிலாந்து, நார்வே உள்ளிட்ட பல்வேறு நாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் வசதியாக இருக்கும்.

தரங்கம்பாடியில் 1305-ம் கட்டப்பட்ட மாசிலாநாதர் கோவில், கடற்கரை அருகில் 1620-ம் ஆண்டு கட்டப்பட்ட டேனிஷ் கோட்டை, அதில் உள்ள அருங்காட்சியகம், டேனிஷ் கவர்னர் மாளிகை, பழமையான தேவாலயங்கள் ஆகியவற்றை காண வரும் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் ரெயில் சேவையை தொடங்கினால் பயனுள்ளதாக இருக்கும். எனவே, மயிலாடுதுறை- தரங்கம்பாடி இடையே மீண்டும் ரெயில் சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்