தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய கோரி கிராம மக்கள் சாலை மறியல்

புதுப்பேட்டை அருகே தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-02-18 21:30 GMT
புதுப்பேட்டை,

புதுப்பேட்டை அருகே உளுந்தாம்பட்டு கிராமம் உள்ளது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து, மின் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றின் மின்மோட்டார் திடீரென பழுதானது. இதனால் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் தடை ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பழுதடைந்த மின் மோட்டாரை சீரமைத்து, தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இருப்பினும் இதுவரை மின்மோட்டார் சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைத்து, தடையின்றி குடிநீர் வழங்க கோரி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளிடம் பேசி, பழுதடைந்த மின் மோட்டாரை சீரமைத்து, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக் கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் மறியலை கை விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் பண்ருட்டி-காவனூர் சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

மேலும் செய்திகள்