காஞ்சீபுரம் அருகே மினிவேன் மீது தனியார் பஸ் மோதல்; 9 பேர் உடல் நசுங்கி சாவு

காஞ்சீபுரம் அருகே, துக்க வீட்டுக்கு வந்தவர்களின் மினிவேன் மீது தனியார் பஸ் பயங்கரமாக மோதியதில் 9 பேர் பலி ஆனார்கள். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-02-18 23:00 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் தாமல் அம்பேத்கர் நகரை சேர்ந்த தேவன்மணி என்பவரின் மனைவி நளினி (வயது 30). குடும்பத்தகராறின் காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வேலூர் மாவட்டம் நெமிலியை அடுத்த சிறுணைமல்லி மேட்டுகாலனியை சேர்ந்த ஆண், பெண், குழந்தைகள் உள்பட 24 பேர் ஒரு மினிவேனில் நேற்று தாமலுக்கு புறப்பட்டு சென்றனர்.

காஞ்சீபுரம் அருகே தாமலில் உள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் மினிவேன் வந்து கொண்டு இருந்தது. அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இருந்து வந்த தனியார் நிறுவன பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக மினிவேனின் பின் பகுதி மீது பயங்கரமாக மோதியது.

உடனே வேனில் இருந்தவர்கள் அலறித் துடித்தனர். பஸ் மோதிய வேகத்தில் மினிவேன் நொறுங்கியது.

தகவல் அறிந்த பாலுசெட்டிசத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் மினிவேனில் இருந்த ஆளவட்டான் (60) என்பவரும் மேலும் பரிமளா (50), பஞ்சமி (50), சின்னப்பொண்ணு (65), துலுக்காணம் (55), முத்தம்மாள (50), ராஜிக்கன்னி (50), இந்திரா (40), சுமித்ரா (45) ஆகிய 8 பெண்களும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி ஆனார்கள்.

மேலும் ரேவதி (27), கற்பகம் (40), பொற்கொடி (32), அஸ்வினி (5) ஆகியோர் உள்பட 15 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். காயம் அடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பலியானவர்களின் உடல்கள் காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் இறந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள் கதறி அழுதனர்.

இதற்கிடையே, இந்த விபத்து காரணமாக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து நடந்த இடத்தில் திரண்ட பொதுமக்கள் ஆத்திரத்தில் விபத்தை ஏற்படுத்திய பஸ்சின் கண்ணாடியை அடித்து நொறுக்கினார்கள். விபத்தில் சிக்கிய வாகனங்கள் அகற்றப்பட்டதையடுத்து போக்குவரத்து சீரானது.

இந்த விபத்து குறித்து பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பஸ் டிரைவரை தேடி வருகிறார்கள். துக்க வீட்டுக்கு வந்தபோது விபத்தில் சிக்கி 9 பேர் பலியான சம்பவம் காஞ்சீபுரத்தில் பெரும்சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்