திருப்பூரில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பூரில் திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-02-18 21:30 GMT
அனுப்பர்பாளையம்,

தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்த கே.கே.பட்டியை சேர்ந்தவர் பரிதிதிலகம் (வயது 34). இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் ஆவுடையார்புரம் பகுதியை சேர்ந்த அக்பர் (58) என்பவரின் மகள் அகிலா என்ற பூஜாவுக்கும்(29) கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு பரிதிதிலகம், அகிலாவை அழைத்து கொண்டு திருப்பூருக்கு வந்தார். அவர்கள் இருவரும் 15 வேலம்பாளையத்தை அடுத்த சோளிபாளையம் சீனிவாசபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர்.

திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தால் கணவன்-மனைவி இருவரும் மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டு வந்துள்ளனர். மேலும் அகிலா இதுதொடர்பாக கணவரிடம் அடிக்கடி கூறி வேதனைபட்டுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று பரிதிதிலகம் வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டார். பின்னர் இரவு வீட்டிற்கு திரும்பிய அவர் வீட்டு கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால் தட்டி உள்ளார்.

நீண்ட நேரமாக தட்டியும் அகிலா கதவை திறக்காததால் சந்தேகமடைந்த பரிதிதிலகம் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அங்கே மனைவி தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அகிலாவின் உடலை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து தகவலறிந்த 15 வேலம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அகிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருப்பூரில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்