அனாதை பிணம் என்று நினைத்து இந்து மக்கள் கட்சி பிரமுகரின் சகோதரர் உடல் எரிப்பு

அனாதை பிணம் என்று நினைத்து இந்து மக்கள் கட்சி பிரமுகரின் சகோதரர் உடல் எரிக்கப்பட்டது.

Update: 2018-02-18 22:00 GMT
செங்கல்பட்டு,

செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே சுமார் 64 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக செங்கல்பட்டு டவுன் போலீசாருக்கு நேற்று முன்தினம் மாலை தகவல் வந்தது.

இந்த நிலையில் நேற்று காலை 10½ மணியளவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றியதாக தெரிகிறது. இதையடுத்து செங்கல்பட்டு நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஒருவரின் உதவியுடன் இறந்து கிடந்தவரின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்து சென்று எரித்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இறந்து கிடந்தது செங்கல்பட்டை அடுத்த புலிப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் காஞ்சீபுரம் மாவட்ட தலைவராக உள்ள சண்முகம் என்பவரது சகோதரர் நந்தன் என்பது தெரியவந்தது. தனது சகோதரரின் உடலை உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் எப்படி எரிக்கலாம் என்று செங்கல்பட்டு டவுன் போலீசாரிடம் அவர் கேள்வி எழுப்பினார்.

அப்போது போலீசார் அனாதை பிணம் என்று நினைத்து எரித்து விட்டோம் என்று கூறியதாக தெரிகிறது.

பொதுவாக ஒரு அடையாளம் தெரியாத பிணம் கண்டெடுக்கப்பட்டால் கிராம நிர்வாக அலுவலர் சம்பந்தப்பட்ட போலீசில் புகார் தெரிவிக்க வேண்டும். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரியில் அதிகபட்சம் 3 மாதங்கள் வைத்திருக்கவேண்டும். அதற்குள் போலீசார் இது குறித்து அனைத்து போலீஸ் நிலையங்களிலும் துண்டு பிரசுரம் ஒட்ட வேண்டும். 3 மாதங்களுக்குள் யாரேனும் தேடி வராவிட்டால் நகராட்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து அந்த உடலை எரிக்கவேண்டும். இதுதான் நடைமுறை. ஆனால் எந்தவித விதிமுறையும் பின்பற்றாமல் பிணத்தை எரித்துள்ளனர்.

இது குறித்து செங்கல்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு மதிவாணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

போலீசார் யாரும் பிணத்தை எரிக்கவில்லை. சிவனடியார்கள் வந்து அனாதை பிணத்தை அடக்கம் செய்வதாக கூறி எடுத்து சென்று விட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளிக்க உள்ளதாக சண்முகம் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்