பெண் குழந்தைகளை பாதுகாப்பது பெற்றோர்-செவிலியர்களின் கடமை கலெக்டர் பேச்சு,

பாலியல் தொந்தரவுகளில் இருந்து பெண் குழந்தைகளைபாதுகாப்பது பெற்றோர் மற்றும் செவிலியர்களின் முக்கிய கடமையாகும் என்று கிராமப்புற செவிலியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பில் கலெக்டர் வெங்கடாசலம் கூறினார்.

Update: 2018-02-18 21:30 GMT
தேனி, 

வீரபாண்டியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கிராமப்புற செவிலியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு நடந்தது. மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.

தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்துக்கும், பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கும் பல்வேறு திட்டங்களை தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் செயல்படுத்தி வருகிறது. பெண் குழந்தைகளை பாலியல் தொந்தரவுகளில் இருந்து பாதுகாப்பது பெற்றோர் மற்றும் கிராமப்புற செவிலியர்களின் முக்கிய கடமையாகும்.

ஒரு பெண் குழந்தைக்கு சமூகத்தில் மற்றவர்கள், அண்டை அயலார்கள் தங்களை தொடும் இயல்பில், நல்ல தொடுதல், தீய தொடுதல் எவை? என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுகின்ற வகையில் செவிலியர்கள் எடுத்துரைக்க வேண்டும். பெண்களுக்கு சட்ட ரீதியாக வழங்கப்படும் பாதுகாப்புகள், அரசின் திட்டங்கள் குறித்தும் செவிலியர்கள் விளக்க வேண்டும்.

பெண்களின் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம். பெண் கல்வி, பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமே சமுதாயம் மேன்மையடையும். எனவே, கிராமப்புற செவிலியர்கள் தங்களது பணியினை சிறப்புடன் செய்து பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு பங்களிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்