மரக்காணத்தில் உப்பு உற்பத்தி தொடங்கியது

மரக்காணத்தில் உப்பு உற்பத்தி தொடங்கியது.;

Update: 2018-02-18 21:30 GMT
மரக்காணம்,

மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளது. இங்கிருந்து ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு அனைத்தும் உணவுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. இத்தொழிலை நம்பி மரக்காணம் பகுதியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் உள்ளனர். இப்பகுதியில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தொடங்கும் உப்பு உற்பத்தி பணி தொடர்ந்து அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரை நடைபெறும். ஆனால் கடந்த 2 மாதத்துக்கு முன்பு பெய்த மழை மற்றும் பருவநிலை மாற்றத்தினால் கடல்நீர் பக்கிங்காம் கால்வாய் வழியாக புகுந்ததில் உப்பளங்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கிவிட்டது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்து உப்பளங்கள் தயாரான நிலையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உப்பு உற்பத்தி செய்வதற்கான முதல்கட்ட பணிகளான பாத்திகள் அமைத்தல், கால்வாய் அமைத்தல், உப்பு பாத்திகளை பதப்படுத்துதல் ஆகிய பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இப்பணிகள் முடிந்ததை தொடர்ந்து தற்போது உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதத்திலேயே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் ஏப்ரல் மற்றும் மே போன்ற கோடை காலங்களில் இதைவிட வெயிலின் தாக்கம் அதிகரிக்கக்கூடும். இதன் காரணமாக உப்பு உற்பத்தியின் அளவும் அமோகமாக இருக்கும் என உப்பு உற்பத்தியாளர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்