பெண்களே தயாரித்து விற்கும் ‘அசாம் மது’

வடகிழக்கு மாநிலப் பகுதிகளுக்குப் போனால், அங்கு பெண்கள் மட்டும் தயாரிக்கும் ஒருவகை மது பிரபலமாக இருப்பதை அறியலாம்.

Update: 2018-02-18 10:15 GMT
வடகிழக்கு மாநிலப் பகுதிகளுக்குப் போனால், அங்கு பெண்கள் மட்டும் தயாரிக்கும் ஒருவகை மது பிரபலமாக இருப்பதை அறியலாம். சமீபத்தில் அசாமின் கவுகாத்தியில் நடைபெற்ற ரொங்காலி கலை, கலாசார உணவுத் திரு விழாவில்கூட இந்த மது முக்கிய இடம் பெற்றிருந்தது.

அசாமின் ஒவ்வொரு வீட்டிலும் இந்த மதுவை பெண்கள் மட்டுமே தயாரிக்கிறார்கள். அதிலும் ஒவ்வொரு வீட்டிலும் இதன் தயாரிப்பு முறை வேறுபடும், அதனால் சுவையிலும் வித்தியாசம் தெரியும். ஆனால், அடிப்படையாக, அரிசியில் இருந்துதான் இது தயாரிக்கப்படுகிறது. அதனால் இதனை ‘ரைஸ் பீர்’ என்று அழைக்கிறார்கள்.

மேற்குறிப்பிட்ட திருவிழாவில், அசாமிய பாரம்பரிய உணவுகளுக்கான அரங்கை அமைத்திருந்த கவுதம் கோகோய் என்பவர் கூறும்போது..

‘‘அசாமில் அனேகமாக எல்லா வீடுகளிலும் இந்த பீர் தயாரிக்கப்படுகிறது என்றபோதும், ஒவ்வொரு வீட்டிலும் தயாரிப்பு முறை வேறுபடும். அவர்கள் வெவ்வேறு வகை அரிசியை உபயோகிப்பார்கள். எனவே வித்தியாசமான நிறங்களில் இந்த பீர் காணப்படும். உதாரணத்துக்கு, லேசான கரி வாசனை அடிக்கும் வெண்ணிற பீர், ஆப்பிள் ஜூஸ் போன்ற நிறமும் சுவையும் கொண்ட பீர், பச்சை நிறமுள்ள பீர் என்று பலவகை பீர்கள் உள்ளன’’ என்கிறார்.

ஆனால் இந்த பீர் தயாரிக்கும் முறையானது பெரும்பாலான அசாமிய ஆண்களுக்கு தெரியவில்லை. அது, பெண்கள் மட்டுமே அறிந்த ரகசியமாம்.

ஒருமுறை ஆண்கள் இந்த பீரை தயாரிக்கும் முறையில் இறங்கியதாகவும், அது குடிக்கவே முடியாமல் போய்விட்டதாகவும் வடகிழக்குப் பகுதியில் கதைகள் உலவுகின்றன. மற்றொரு விஷயம், இந்த அரிசி பீர் கடைகளில் பாட்டில்களில் ரெடிமேடாக கிடைப்பதில்லை. கிடைத்தால் வாங்கிச் சென்று வைத்திருந்து பருகவும் முடியாது.

‘‘நொதிக்க வைத்த அரிசிச் சோற்றில் இருந்துதான் இந்த பீர் தயாரிக்கப்படுகிறது. பீர் தயாரிக்கப்பட்ட பிறகும் அந்த நொதித்தல் வினை தொடர்ந்து கொண்டே இருக்கும். எனவே, இரண்டொரு நாளில் இந்த பீர் குடிக்க முடியாமல் போய்விடும். எனவே, புத்தம் புதிதாக தயாரிக்கப்பட்ட பீரை அருந்தும்போதுதான் இதன் உண்மையான ருசியை உணர முடியும்’’ என்று கோகோய் விளக்குகிறார்.

இதன் தயாரிப்பு முறை, பீர் தயாரிப்பு முறையை ஒத்திருப்பதால் இது பீர் என்று அழைக்கப்படுவதாகவும், உண்மையில் இதன் சுவை ஒயின் போல இருக்கும் என்றும் அவர் கூடுதல் தகவல் சொல்கிறார்.

அசாமின் அரிசி பீர் தயாரிப்பு முறை மிகவும் ரகசியமானது என்று சொல்லப்பட்டாலும், அதுகுறித்த சில விவரங்களைப் பகிர்ந்துகொள்கிறார், உணவு-பானங்கள் பற்றி கட்டுரைகள் எழுதும் மித்தாலி.

‘‘இந்த அரிசி பீர், போரோ பிராந்தியத்தின் ஜுமாய் என்று அழைக்கப்படுகிறது. அங்கு, நாட்டுப்புறங்களில் காணப்படும் 10 முதல் 12 மூலிகைகளுடன் அரிசி மாவைக் கலந்து சிறு ரொட்டி போலத் தயாரிக்கிறார்கள். ‘பீத்தா’ எனப்படும் அதுவும் நொதித்தல் வினையில் பயன்படுத்தப்படுகிறது. மிகச் சரியான முறையில் இந்த ‘பீத்தா’வை தயாரிப்பது எப்படி என்று பெரும்பாலானோருக்குத் தெரியாது. பின்னர், தண்ணீர் இல்லாமல் கெட்டியான பசை போல சாதம் தயாரிக்கப்படுகிறது. அடுத்து, பீத்தாவை அதனுடன் கலந்து, ஒரு மண்பானையில் இட்டு மூடி, இருட்டான இடத்தில் வைத்துவிடுகிறார்கள். சுமார் பத்து நாட்களில் பீர் தயாராகி விடும். மூங்கிலாலான வடிகட்டியால் அதை வடித்துப் பரிமாறுவார்கள்’’ என்று மித்தாலி விளக்கமாகக் கூறுகிறார்.

இன்னொரு பீர் தயாரிப்புமுறை, வழிவழியாக தாய்மார்களால் தங்கள் மகள்களுக்கு கற்றுத் தரப்படுகிறது. அகோம் இனம் போன்றவற்றில், குறிப்பிட்ட விசேஷங் களுக்கு மட்டும் அந்த பீரை தயாரிக்கிறார்கள்.

‘‘இந்த தயாரிப்பு முறையில் அரிசியானது தண்ணீர் சேர்த்து சமைக்கப்படாமல், ஆவியால் வேக வைக்கப்படுகிறது. மற்ற முறைகள் எல்லாம், முன்புகூறிய ‘ஜுமாய்’ பீர் போலத்தான்’’ என்றும் மித்தாலி சொல்கிறார்.

யாராவது வெளியிடங்களில் இந்த பீர் விற்பதாக இருந்தால், அது தண்ணீர் கலந்ததாகத்தான் இருக்கும் என்பது இவர் சொல்லும் தகவல்.

‘‘வியாபாரிகள் லாபம் பார்க்கணுமே? அதனால்தான் ஒரு பாட்டில் தூய அரிசி பீரில், ஒரு பாட்டில் தண்ணீரைக் கலந்து விடுகிறார்கள்’’ என்கிறார்.

வியாபாரிகளிடம் இருந்து வாங்கும் பீரும் சரி, வீட்டில் விருந்தினர்களுக்கு அளிக்கப்படும் பீரும் சரி, ஒரே மாதிரி ஒயின் போல ருசிக்கும் என்றாலும், வீட்டில் வழங்கும் பீரில் ‘கிக்’ கூடுதல் என்கிறார்கள் அதை ருசித்தவர்கள்.

‘‘மொடாக்குடியர்களும் கூட, இரண்டு கிளாஸ் ‘தரமான’ அரிசி பீர் அருந்தினால் தள்ளாடி விடுவார்கள்’’ என்று சிரிக்கிறார், மித்தாலி.

ஒரு முறை, ஆளில்லாத வீட்டுக்குள் புகுந்து, பானைகளில் இருந்த அரிசி பீரை பருகிய காட்டு யானைகளே தடுமாறிவிட்டன என்றொரு கதையும் கூறப்படுகிறது.

பொதுவாக, ஒவ்வொரு வீட்டிலும் தயாரிக்கும் அரிசி பீரை அந்தந்த குடும்பத்தினரும் உறவினர்களும் மட்டுமே பகிர்ந்துகொள்கிறார்கள்.

அசாமிய உணவுக் கலாசாரத்தில் இந்த அரிசி பீர் ஒன்றிப்போன ஒன்று.

ஏதாவது உணவுடன் அரிசி பீரும் வழங்கினால் அதில் இனிப்புகள் எதுவும் பரிமாறமாட்டார்கள். இந்த வழக்கத்தினாலோ என்னவோ, அசாமியர்கள் பெரும்பாலும் இனிப்புப் பண்டங்களை விரும்புவதில்லை.

அதேபோல, அரிசி பீருடன், ‘கார்’ என்ற உணவைப் பரிமாறவே மாட்டார்கள். காரணம், அது அமிலத்தன்மை வாய்ந்தது என்பதால், அரிசி பீருடன் சரியாக ஒத்துப் போகாதாம்.

தங்கள் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு அரிசி பீர் அளிப்பதை மிகப் பெரிய கவுரவமாக அசாமியர்கள் கருதுகிறார்கள்.

மேலும் செய்திகள்