புனேயில், தொழில் நஷ்டத்தால் மனைவி, 2 மகள்களை கொன்று தொழில் அதிபர் தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது

புனேயில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மனைவி, 2 மகள்களை கொலை செய்துவிட்டு, தொழில் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2018-02-17 23:00 GMT
புனே,

புனேயில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மனைவி, 2 மகள்களை கொலை செய்துவிட்டு, தொழில் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது.

தொழிலில் நஷ்டம்

புனே, வார்ஜே பகுதியை சேர்ந்தவர் நிலேஷ்(வயது38). தொழில் அதிபரான இவர், பிளாஸ்டிக் தொழிற்சாலை நடத்தி வந்தார். இவரது மனைவி நீலம்(33). இவர்களுக்கு ஷரவானி(9), ஸ்ரேயா(7) என்ற 2 மகள்கள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நிலேஷ் தொழிலை விரிவுப்படுத்த பலரிடம் அதிகளவில் கடன் வாங்கி உள்ளார்.

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அவரால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை. மேலும் கடன் கொடுத்தவர்கள் அவரிடம் கடனை கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டு வந்தார்.

பிணமாக கிடந்தனர்

இந்தநிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டின் கதவு வெகுநேரமாக பூட்டியே இருந்தது. அக்கம் பக்கத்தினர் பலமுறை தட்டிப்பார்த்தும் கதவை யாரும் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டினுள் நிலேஷ் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். மேலும் அவரது மனைவி, 2 மகள்களும் வாயில் நுரை தள்ளிய நிலையில் படுக்கையில் பிணமாக கிடந்தனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் 4 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உருக்கமான கடிதம்

முன்னதாக போலீசார் நிலேஷ் வீட்டில் இருந்து அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், “நாங்கள் எங்கள் உலக வாழ்க்கையை முடித்து கொள்கிறோம். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இந்த முடிவை எடுக்கிறோம். எனது சாவிற்கு யாரும் காரணமில்லை. எனது மனைவி, மகள்களை நான் மிகவும் நேசிப்பதால் அவர்களையும் என்னுடன் அழைத்து செல்கிறேன்” என உருக்கமாக எழுதப்பட்டு இருந்தது.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக நிலேஷ், தனது மனைவி, மகள்களுக்கு விஷம் கொடுத்து பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவி, மகள்களை கொலை செய்துவிட்டு தொழில் அதிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்