சட்டசபை தேர்தலுக்காக வாய்க்கு வந்ததை பேசுகிறார் ராகுல்காந்தி, பகுதிநேர அரசியல்வாதி பா.ஜனதா கடும் தாக்கு

சட்டசபை தேர்தலுக்காக வாய்க்கு வந்ததை ராகுல்காந்தி பேசி வருவதாகவும், அவர் பகுதிநேர அரசியல்வாதி என்றும் பா.ஜனதா மூத்த தலைவர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

Update: 2018-02-17 22:00 GMT
பெங்களூரு,

சட்டசபை தேர்தலுக்காக வாய்க்கு வந்ததை ராகுல்காந்தி பேசி வருவதாகவும், அவர் பகுதிநேர அரசியல்வாதி என்றும் பா.ஜனதா மூத்த தலைவர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடக மாநில பா.ஜனதா முன்னாள் தலைவருமான பிரகலாத் ஜோஷி நேற்று கலபுரகியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராகுல்காந்தி பகுதிநேர அரசியல்வாதி


காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் கர்நாடக மக்கள் மீதும், கர்நாடகம் மீதும் அக்கறை இருப்பது போல பேசி வருகிறார். முதல்-மந்திரி சித்தராமையாவிடம் இருந்து பிரதமர் நரேந்திர மோடி பாடம் கற்க வேண்டும் என்று ராகுல்காந்தி சொல்லி இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. பிரதமர் தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் தான் நாடு வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. குஜராத் தேர்தலின் போதும் ராகுல்காந்தி இந்து கோவில்களுக்கு சென்று வழிபட்டார்.

தற்போது கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், இங்குள்ள கோவில்களுக்கு சென்று அவர் வழிபட்டு வருகிறார். சட்டசபை தேர்தலுக்காக பிரசாரத்தின் போது தனக்கு வாய்க்கு வந்ததை ராகுல்காந்தி பேசு கிறார். அவரது பேச்சை பா.ஜனதா பெரிதாக எடுத்து கொள்ளாது. ஏனெனில் ராகுல்காந்தி பகுதிநேர அரசியல்வாதி. தேர்தல் வந்தால் மட்டும் இந்துக்கள் மீது அக்கறை காட்டுவார், கோவில்களுக்கும் செல்வார்.

பொறுப்பை உணர்ந்து...

காங்கிரஸ் ஆட்சியில் மாநிலத்தில் எந்தவொரு வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது. மாநிலத்தில் கொலை செய்யப்படுவர்கள் அனைவரும் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களா? என்று உள்துறை மந்திரி ராமலிங்கரெட்டி பேசியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் ஏதோ ஒரு கிராமத்தில் உள்ள தலைவர் போல ராமலிங்கரெட்டி பேசக்கூடாது. இந்த மாநிலத்தின் உள்துறை மந்திரி என்ற பொறுப்பை உணர்ந்து அவர் பேச வேண்டும்.

இவ்வாறு பிரகலாத் ஜோஷி கூறினார்.

மேலும் செய்திகள்