காவிரி நதிநீர் பிரச்சினையில் தீவிர போராட்டத்தால் கர்நாடகத்திற்கு நியாயம் கிடைத்துள்ளது மந்திரி எம்.பி.பட்டீல் பேட்டி

காவிரி நதிநீர் பிரச்சினையில் தீவிர போராட்டத்தால் கர்நாடகத்திற்கு நியாயம் கிடைத்துள்ளது என்று மந்திரி எம்.பி.பட்டீல் தெரிவித்துள்ளார்.

Update: 2018-02-17 21:45 GMT
பெங்களூரு,

காவிரி நதிநீர் பிரச்சினையில் தீவிர போராட்டத்தால் கர்நாடகத்திற்கு நியாயம் கிடைத்துள்ளது என்று மந்திரி எம்.பி.பட்டீல் தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ள தீர்ப்பு குறித்து கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நியாயம் கிடைத்துள்ளது

காவிரி நதிநீர் பிரச்சினை இன்று, நேற்றாக நடைபெறவில்லை. ஆண்டு கணக்கில் இந்த பிரச்சினை நடந்து வருகிறது. நமது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக சோழர் காலத்திலேயே காவிரி நதிநீர் பிரச்சினை கர்நாடகத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இருந்து வருகிறது. காவிரி பிரச்சினைக்கு என்று தனி வரலாறே உள்ளது. இந்த பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தமிழ்நாட்டுக்கு வழங்கிய தண்ணீரின் அளவை குறைத்தும், பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்காக கூடுதலாக தண்ணீரை பயன்படுத்தி கொள்ள அனுமதித்தும் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதிநீருக்காக கர்நாடகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்த தீவிர போராட்டம் காரணமாக காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மூலம் கர்நாடகத்திற்கு நியாயம் கிடைத்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் கர்நாடக மக்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்துள்ளனர்.

நீர்ப்பாசனத்துறைக்கு முக்கியத்துவம்

காவிரி பிரச்சினையில் நமது பக்கம் உள்ள நியாயத்தை சரியாக எடுத்து வைத்து வக்கீல்கள் வாதாடினார்கள். கர்நாடக அரசு சார்பாக ஆஜரான வக்கீல்கள் திறமையாகவும், நியாயமான வாதங்களையும் வைத்து வாதாடி நமக்கு வெற்றி தேடி தந்துள்ளனர். மூத்த வக்கீல் பாலி நாரிமன் உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்ட போதும், கோர்ட்டில் ஆஜராகி கர்நாடகத்திற்கு ஆதரவாக வாதாடினார். இதற்காக அவருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

காங்கிரஸ ஆட்சிக்கு வந்தது முதல் மாநிலத்தில் நீர்ப்பாசனத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. வேறு எந்த ஒரு அரசும் ஒதுக்காத அளவுக்கு காங்கிரஸ் தான் அதிக நிதியை ஒதுக்கியதுடன், அதற்கான திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்