டெங்குவை ஒழிக்க தனிப்பிரிவு தொடங்க வேண்டும் சுகாதார ஆய்வாளர் சங்க மாநில செயலாளர் பேட்டி

டெங்கு உள்ளிட்ட நோய்களை ஒழிக்க தனிப்பிரிவு தொடங்க வேண்டும் என்று சுகாதார ஆய்வாளர் சங்க மாநில செயலாளர் தெரிவித்தார்.

Update: 2018-02-17 21:30 GMT
திண்டுக்கல்,

மாநகராட்சி, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி பேசினார். செயலாளர் இளங்கோ, பொருளாளர் ஜெயபால்மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். இதைத்தொடர்ந்து மாநில செயலாளர் இளங்கோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நோய்த்தடுப்பு, சுகாதாரம், பிறப்பு, இறப்பு பதிவு, கட்டணங்கள் வசூலித்தல் உள்ளிட்ட பணிகளை சுகாதார ஆய்வாளர்கள் கவனித்து வருகிறேம். ஆனால் தற்போது திடக்கழிவு மேலாண்மை பணியும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், டெங்கு உள்ளிட்ட நோய்த்தடுப்பு, சுகாதார பணிகளை முறையாக செய்ய முடிவதில்லை. எனவே, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் ஆகிய மாநிலங்களை போல திடக்கழிவு மேலாண்மை பணிகளை பொறியியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளாக உயிர்க்கொல்லி நோயான டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. எனவே காலியாக உள்ள 2 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும், டெங்கு உள்ளிட்ட நோய்களை முற்றிலும் ஒழிக்க தனி மருத்துவர்கள், சுகாதார அலுவலர், ஆய்வாளர், பூச்சியியல் வல்லுனர், களப்பணியாளர்கள் அடங்கிய தனிப்பிரிவு தொடங்க வேண்டும்.

கொசுப்புழு தடுப்பு பணிகளை சரியாக செய்யாமல் இருத்தல் உள்ளிட்ட சுகாதார குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கவும், கட்டிடங்களை பூட்டி சீல் வைக்கும் வகையிலும் பொதுசுகாதார விதிகளை மாற்றி அமைக்க வேண்டும். காலியாக உள்ள நகர்நல அலுவலர் பணியிடங்களுக்கு, பதவி உயர்வு அடிப்படையில் மூத்த சுகாதார ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும். நகராட்சிகளில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்களை கலந்தாய்வு மூலமே இடமாற்றம் செய்ய வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழக அரசின் தலைமை செயலாளரிடம் கொடுக்க உள்ளோம்.

மேலும் செய்திகள்