தினகரனுக்கும், அ.தி.மு.க.விற்கும் சம்பந்தம் இல்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

தினகரனுக்கும், அ.தி.மு.க.விற்கும் சம்பந்தம் இல்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

Update: 2018-02-17 23:15 GMT
பேரையூர்,

திருமங்கலம் தொகுதி அலப்பலச்சேரியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கினார். முகாமை தொடங்கி வைத்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த ஆட்சி தனக்கு பின்னும் 100 ஆண்டுகள் இருக்க வேண்டும் என்று கூறினார். அதன்படி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்து வருகிறார். சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறந்து வைத்ததற்கு சில எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இது மக்கள் கருத்து அல்ல. அவர்களின் சொந்த கருத்து ஆகும்.

தமிழக ஜீவாதார பிரச்சினையில் ஜெயலலிதா வழியில் இந்த அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் உரிமைகளை ஜெயலலிதா வழியில் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெறுவோம். தினகரனுக்கும் அ.தி.மு.க.விற்கும் சம்பந்தம் கிடையாது. எனவே தான் அவர்கள் தனிக்கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார்.

29 மாநிலங்களில் தமிழகத்தில் தான் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. அரசியல் காரணத்திற்காக குறை கூறுபவர்களும் தமிழகத்தில் தான் உள்ளனர். அவர்களால் எந்த ஆதாரத்தையும் தர முடியாது. இந்த ஓராண்டில் முதல்-அமைச்சர் அலுவலகத்தில் எந்த கோப்புகளும் நிலுவையில் இருந்தது கிடையாது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஓராண்டில் மக்கள் பணியில் மிகப்பெரிய அடித்தளம் அமைத்துள்ளது. இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேல் இந்த இயக்கம் மக்கள் பணி செய்யும் வகையில் அமையும். இவ்வாறு அவர் பேசினார். 

மேலும் செய்திகள்