கவர்னரின் கவனத்தை ஈர்க்கும் வகையில்சிதம்பரத்தில் கடை அடைப்பு

சிதம்பரத்தில் சாலையை சீரமைக்க கோரி கவர்னரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வர்த்தக சங்கத்தினர் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.

Update: 2018-02-17 21:30 GMT
சிதம்பரம்,  

குடிநீர் மற்றும் விவசாய பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் கொள்ளிடம் மற்றும் வெள்ளாற்றில் தடுப்பணைகள், கதவணைகள் கட்ட வேண்டும். சிதம்பரம் பகுதியில் உள்ள குளங்கள், வாய்க்கால்கள் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க வேண்டும், வக்காரமாரி குடிநீர் திட்டத்தினை விரிவுபடுத்தி தூர்வார வேண்டும். சிதம்பரத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும், சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேதமடைந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  

இதையடுத்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சிதம்பரத்துக்கு வருகை தரும் கவர்னர் பன்வாரிலால்புரோகித்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடைஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வர்த்தக சங்கத்தினர் அறிவித்தனர். அதன்படி நேற்று சிதம்பரம் நகரம் மற்றும் அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் சிதம்பரத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சிதம்பரம் தெற்கு வீதி, வடக்கு வீதி, மேற்கு வீதி, கிழக்கு வீதி, காசுக்கடை தெரு உள்ளிட்ட கடை வீதிகள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக கவர்னர் பன்வாரிலால்புரோகித் நேற்று சிதம்பரம் வந்த நிலையில், வர்த்தக சங்கத்தினர் கடைகள் அனைத்தையும் அடைத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்