தஞ்சை அருகே தலையை துண்டித்து முதியவர் கொலை போலீஸ் விசாரணை

தஞ்சை அருகே தலையை துண்டித்து முதியவரை கொலை செய்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-02-17 22:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் அருகே உள்ள சமுத்திரம் ஏரி கீழ்க்கரையில் அம்மன்நகர் உள்ளது. இந்த நகரில் உள்ள அய்யனார் கோவில் அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதை பார்த்த ஊராட்சி எழுத்தர் ராமகிருஷ்ணன், மாரியம்மன்கோவில் கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்துக்கு தகவல் தெரிவித்தார். அவர், தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

முதியவர் உடல் கிடந்த பகுதியில் இருந்து 10 அடி தூரத்தில் அவரது தலை கிடந்தது. உடலும் அழுகி காய்ந்து சுருங்கிய நிலையில் இருந்தது. இந்த சம்பவம் நடந்து 4 நாட்கள் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கழுத்துப்பகுதியில் எடுக்கப்பட்ட ஸ்கேன் ரிப்போர்ட் உடல் அருகே கிடந்தது. அதில் 2012-ம் ஆண்டு தேதியும், அய்யாக்கண்ணு என்ற பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.

கைரேகை பிரிவு இன்ஸ்பெக்டர் பாலு, தடய அறிவியல்துறை உதவி இயக்குனர் ராமச்சந்திரன் ஆகியோரும் வந்து பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் முதியவரின் உடல், தலையை போலீசார் மீட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.கொலை செய்யப்பட்ட முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று தஞ்சை தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கொலை செய்யப்பட்டவர் மனோஜிப்பட்டி ராஜராஜன்நகரை சேர்ந்த அய்யாக்கண்ணு என்பது தெரியவந்துள்ளது. இவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து தஞ்சை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்