தூத்துக்குடி காட்டு பகுதியில் காரில் கடத்தி இளம்பெண் கொலை போலீஸ் தீவிர விசாரணை

தூத்துக்குடியில் காட்டு பகுதியில் காரில் கடத்தி கொண்டு வரப்பட்டு இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

Update: 2018-02-17 22:00 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் காட்டு பகுதியில் காரில் கடத்தி கொண்டு வரப்பட்டு இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம்பெண்


தூத்துக்குடி சங்கரபேரி செல்லும் சாலையில் ஜோதிநகர் காட்டு பகுதியில் நேற்று மதியம் ஒரு சிறுவனின் அழுகை சத்தம் கேட்டுக்கொண்டு இருந்தது. அந்த சத்தம் கேட்டு, அங்குள்ள தனியார் லாரி செட்டில் இருந்தவர்கள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு சுமார் 2 வயதுடைய சிறுவன் ஒருவன் தனது கையில் பால் பாட்டிலுடன் அழுது கொண்டு இருந்தான். அவன் அருகே 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், இறந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து தூத்துக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம், சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிஹரன், சப்–இன்ஸ்பெக்டர் முத்துமாலை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் போலீசார் இறந்து கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காரில் கடத்தல்...


இறந்த நிலையில் கிடந்த பெண் யார் என்று தெரியவில்லை. அவர் சுடிதார் அணிந்து இருந்தார். அவர் கழுத்தில் சுடிதார் துப்பட்டாவால் இறுக்கமாக சுற்றப்பட்டு இருந்தது. சிறுவனின் அழுகை சத்தம் கேட்பதற்கு முன்பு அந்த காட்டு பகுதியில் இருந்து ஒரு கார் வேகமாக சென்றதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.

மர்ம மனிதர்கள் அந்த பெண்ணை காரில் கடத்தி, துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்த பின்னர் சங்கரபேரி ஜோதிநகர் காட்டு பகுதியில் உடலை வீசி சென்று இருக்கலாம் என்றும், பரிதாபப்பட்டு அந்த சிறுவனை கொலை செய்யாமல் சென்று இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் அந்த சிறுவன் அம்மா, அம்மா என்று அழுவதால் இறந்த நிலையில் கிடந்த பெண், அந்த சிறுவனின் தாயாக இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவத்தை அந்த சிறுவன் பார்த்து இருக்கலாம் என்பதால் போலீசார் அந்த சிறுவனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்