வாலிபரை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது

வாலிபரை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-02-17 22:00 GMT
செங்கல்பட்டு,

செங்கல்பட்டு களத்துமேட்டு பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா என்ற அப்துல்ரசாக் (வயது 23). அதே பகுதியை சேர்ந்த ருத்ரா என்ற ருத்ரகுமார் (23). திம்மாவரம் பாலுநகரை சேர்ந்தவர் உதயா என்ற உதயகுமார் (23). செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ் ( 20). இவர்கள் 4 பேரும் கடந்த 15-ந்தேதியன்று செங்கல்பட்டு பச்சையம்மன் கோவில் அருகே மது அருந்திக்கொண்டிருந்தனர்.

இவர்களுடன் ஏற்கனவே கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த அய்யப்பன் என்பவரும் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. போலீசார் வருவதை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இந்த நிலையில் அய்யப்பனை கொல்ல திட்டமிட்டு நேற்று முன்தினம் இரவு அப்துல்ரசாக், ருத்ரகுமார், உதயகுமார், அருள்ராஜ் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் 3 மோட்டார் சைக்கிளில் பயங்கர ஆயுதங்களுடன் அவரது வீட்டுக்கு சென்றனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். அப்போது அய்யப்பனின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சுதாகர் (20) இது குறித்து தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் சுதாகரின் கையில் அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இது குறித்து செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல்ரசாக், ருத்ரகுமார், உதயகுமார், அருள்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்