மண்ணிவாக்கத்தில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 30 பவுன் நகை, பணம் கொள்ளை

மண்ணிவாக்கத்தில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 30 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது.

Update: 2018-02-17 21:45 GMT
வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் மண்ணிவாக்கம் சிந்துநகர், அவ்வை தெருவை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 59). ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர், இவரது மனைவி பொற்செல்வி. கூட்டுறவு துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் மதிவாணன். தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பொற்செல்வி, மதிவாணன் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். காசிநாதன் இரவு 9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்றார். அந்த நேரத்தில் வேலைக்கு சென்ற மதிவாணன் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 30 பவுன் தங்க நகை மற்றும் ரூ.80 ஆயிரம் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து காசிநாதன் ஓட்டேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

மண்ணிவாக்கம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓட்டேரி போலீஸ் நிலையம் அருகில் உள்ள பெட்டிக்கடையில் இருந்த மூதாட்டியை மிரட்டி 5 பவுன் நகையை 2 வாலிபர்கள் பறித்துச்சென்றனர்.

இதே போல மண்ணிவாக்கம், ஓட்டேரி, வண்டலூர், கொளப்பாக்கம், ஊனைமாஞ்சேரி போன்ற பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருடும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. மேலும் தனியாக சாலையில் நடந்துசெல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்களும் நடக்கிறது. இது மட்டுமின்றி தினமும் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போகிறது. இதனை தடுக்க ஓட்டேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் இரவு மற்றும் பகல் நேரத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்