தாம்பரம் அருகே பெண் கழுத்தை அறுத்து கொலை

தாம்பரம் அருகே பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2018-02-17 22:30 GMT
வண்டலூர்,

தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் உள்ள நாகூர் என்பவரின் வீட்டில் பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக மணிமங்கலம் போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை பார்வையிட்டனர்.

அப்போது கத்தியால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதையடுத்து அந்த பெண்ணின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்து கிடந்த பெண் சிங்கபெருமாள்கோவிலை அடுத்துள்ள செட்டிபுண்ணியம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த செல்வம் மனைவி துளசி (வயது 35) என தெரியவந்தது.

செட்டிபுண்ணியத்தில் இருந்து வரதராஜபுரத்தில் உள்ள நாகூர் வீட்டுக்கு எதற்காக துளசி வந்தார்? அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்