வள்ளியூர் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

வள்ளியூர் அருகே, கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் இருந்து 7 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.

Update: 2018-02-17 20:30 GMT
வள்ளியூர்,

வள்ளியூர் அருகே, கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் இருந்து 7 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர். இதில் அவர் கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்தார்.

ஹெல்மெட் அணிந்த மர்மநபர்கள்


நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள ஆ.திருமலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அன்னராஜ் (வயது 55). இவர் வைத்தியலிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி சுமித்ரா தேவி (51). அன்னராஜ் நேற்று மதியம் மனைவியுடன் மோட்டார்சைக்கிளில் ஆ.திருமலாபுரத்தில் இருந்து வள்ளியூரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

வள்ளியூர் மடப்புரம் அருகே வந்தபோது, அவரது மோட்டார்சைக்கிளுக்கு பின்னால் மற்றொரு மோட்டார்சைக்கிளில் மர்மநபர்கள் 2 பேர் ஹெல்மெட் அணிந்து வந்தனர்.

7 பவுன் சங்கிலி பறிப்பு

திடீரென அன்னராஜின் மோட்டார்சைக்கிளை முந்திச் செல்வது போன்று, சுமித்ரா தேவியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். இதில், மோட்டார்சைக்கிளில் இருந்து சுமித்ரா தேவி ரோட்டில் விழுந்ததில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார்சைக்கிளில் மர்மநபர்கள் ஹெல்மெட் அணிந்து வந்து கைவரிசை காட்டிச் சென்ற இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்