ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி எந்திரத்தை உடைக்க முடியாததால் ரூ.6½ லட்சம் தப்பியது

ராஜாக்கமங்கலம் அருகே ஏ.டி.எம். மையத்தில் மர்ம நபர்கள் புகுந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் அதில் இருந்த ரூ.6½ லட்சம் பணம் தப்பியது.

Update: 2018-02-17 23:00 GMT
ராஜாக்கமங்கலம்,

ராஜாக்கமங்கலம் அருகே அனந்தநாடார் குடியிருப்பு பகுதியில் ஒரு தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள் முதலில் தங்களை அடையாளம் தெரியாமல் இருக்க அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை அடித்து உடைத்தனர்.

பின்னர், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் நீண்ட நேரம் போராடியும் பணம் இருக்கும் பகுதியை உடைக்க முடியவில்லை. இதையடுத்து அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால், எந்திரத்தில் இருந்த ரூ.6½ லட்சம் தப்பியது.


நேற்று காலையில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைக்கும் அலுவலர் அழகேசன், ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். அப்போது, அங்கு கொள்ளை முயற்சி நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வங்கி மேலாளர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்