சர்க்கரைக்கு கடிவாளம் போடும் ‘பீன்ஸ்’

சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

Update: 2018-02-17 08:30 GMT
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு பீன்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். பீன்சில் உள்ள கார்போஹைட்ரேட் மெதுவாகக் கரைவதால் அது ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்வதைத் தடுப்பதாகக் கூறப்படுகிறது.

அது மட்டுமல்ல, பீன்சில் இரும்பு, கால்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ், பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன. தொடர்ந்து பீன்ஸ் சாப்பிட்டுவந்தால் அதில் உள்ள பிளேவனாய்டுகள், புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து அந்நோய் வராமல் தடுக்கும்.

வேகவைத்த காய்களை மனிதக் குடல் எளிதில் ஜீரணிப்பதுடன், அதன் சத்துகளை எளிதாக உட்கிரகிக்கும். வேகவைத்த பீன்சை சாப்பிட்டால், அது குடலியக்கத்தைச் சீராக்கி, செரிமானப் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.

100 கிராம் பீன்சில் நார்ச்சத்தின் அளவு 9 சதவீதம். இந்த நார்ச்சத்து, குடலின் உட்புறச் சுவர் களைப் பாதுகாத்து, நச்சுத் தன்மைகளை வெளியேற்றும்.

பீன்சில் ஆன்டி ஆக்சிடன்ட்டுகள், புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம், போலேட், தாமிரம், இரும்புச்சத்து, மாங்கனீஸ், பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகிய கனிமச் சத்துகள் இருப்பதால், இது உடலில் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கும், உடலின் ஆரோக்கியம் காக்கும், இதயத்துக்கும் இதம் சேர்க்கும்.

பீன்சில் உள்ள சிலிக்கான், எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. மற்ற காய்கறிகளைவிட பீன்சில் உள்ள சிலிக்கான் எளிதில் உறிஞ்சப்படுவதோடு, செரிமானமும் அடையும்.

பச்சை பீன்சில் உள்ள கரோட்டினாய்டுகள் சருமத்தின் ஆரோக்கியம் காக்கும், முதுமை அறிகுறி களை தள்ளிப்போட உதவும்.

மேலும் செய்திகள்