திருவாரூரில் விவசாயிகள் சங்கத்தினர் சாலைமறியல்

காவிரி நீர் வழக்கில் 15 டி.எம்.சி. தண்ணீர் குறைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திருவாரூரில் விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்தது.

Update: 2018-02-16 22:58 GMT
திருவாரூர்,

காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்படும் என அறிவித்தது. இதில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று இருந்ததை 14.75 டி.எம்.சி. தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு, தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து தமிழகத்தின் உரிமை மறுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திருவாரூர் பஸ் நிலையம் அருகில் விவசாயிகள் சங்கத்தினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் நலச்சங்க மாநில தலைவர் சேதுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது கோர்ட்டு தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறிது நேரத்தில் விவசாயிகள் விடுவிக்கப்பட்டனர்.

இதேபோல இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மன்னார்குடி பஸ் நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சிவபுண்ணியம் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் வீரமணி, நகர செயலாளர் கலைச்செல்வன், ஒன்றிய துணை.செயலாளர் ராகவன், மாணவர் பெருமன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைஅருள்ராஜன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மகேந்திரன், இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் பாப்பையன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ராஜாங்கம், மாணவர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்